நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் தொடர்பான நிலவரத்தை கண்காணிப்பதற்காக 3 நபர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
கடந்த 14-ம் தேதி முதல், டெல்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்கா மற்றும் மான் பூங்கா உள்ளிட்ட பல பகுதிகளில் 24 பறவைகள் உயிரிழந்தன. இதற்கு பறவைக் காய்ச்சலே (எச்5என்1 வைரஸ்) காரணம் என ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, டெல்லி பூங்காக்கள் இரு தினங்களுக்கு முன்பு மூடப்பட்டன.
இதனிடையே, மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள காந்தி விலங்கியல் பூங்காவில் பறவைகள் உயிரிழந்ததற்கும் பறவைக் காய்ச்சலே காரணம் என ஆய்வில் தெரியவந்தது.
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே ட்விட்டரில் கூறும்போது, “நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் நிலவரத்தைக் கண்காணிக்க 3 நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மாநில அரசுகளுடன் இணைந்து பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்றார்.