இந்தியா

கர்நாடக பாஜகவின் முதல்வர் வேட்பாளர் பசவராஜ் பொம்மை - மேலிடப் பொறுப்பாள‌ர் அருண் சிங் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கர்நாடக பாஜக மேலிடப்பொறுப்பாளர் அருண் சிங் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அவரது நலத் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது. பாஜக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று காங்கிரஸார் வதந்தி பரப்பி வருகின்றனர். அதேபோல முதல்வர் பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை மாற்றப்பட இருப்பதாகவும் கூறிவருகின்றனர்.

கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பசவராஜ் பொம்மையே அடுத்த ஓராண்டுக்கும் முதல்வராக தொடர்வார். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை பசவராஜ் பொம்மை தலைமையிலேயே பாஜக எதிர்கொள்ளும்.

காங்கிரஸில் மத்தியிலும் மாநிலத்திலும் தலைமை இல்லை. கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், மாநில தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் மோதல் நீடித்துவருகிறது. இதனை மறைப்பதற்காக பசவராஜ் பொம்மை குறித்து தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்” என்றார்.

SCROLL FOR NEXT