இந்தியா

மும்முறை தலாக்: பொது வாக்கெடுப்பு நடத்த யோசனை

பிடிஐ

முஸ்லிம் கணவன்மார்கள் 3 முறை தலாக் கூறுவதன் மூலம் தங்கள் மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை குறித்து முஸ்லிம் பெண்கள் இடையே மத்திய அரசு பொது வாக்கெடுப்பு நடத்தலாம் என்ற அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரிய உறுப்பினர் ஜாபர்யாப் ஜிலானி யோசனை கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “இவ்வாறு பொது வாக்கெடுப்பு நடத்தினால் 90 சதவீத பெண்கள் ஷரியத் சட்டத்துக்கு (மும்முறை தலாக் முறைக்கு) ஆதரவாகவே வாக்களிப்பார்கள். முஸ்லிம் தனிப்பட்ட சட்டத்தில் எவ்வித குறுக்கீட்டையும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தலாக் முறையை தடை செய்ய முயற்சிப்பது, பொதுக் குடிமைச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சி ஆகும். இஸ்லாமில் விவாகரத்து வருத்தம் அளிக்கும் செயலாக கருதப்படுகிறது. இதை இஸ்லாம் ஊக்குவிப்பதில்லை” என்றார்.

இஸ்லாமிய சமூகத்தில் காணப்படும் தலாக் விவாகரத்து நடைமுறை, பலதார மணம் ஆகியவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில் ஜாபர்யாப் ஜிலானி இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றம் குறித்து அவர் கூறும்போது, “பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு இஸ்லாமியரின் விருப்பம். இந்தியாவுக்கு எதிரான சதிச் செயல்களால் பாகிஸ்தானும் பாதிக்கப்படுகிறது. அங்கு மசூதிகள் கூட பாதுகாப்பானதாக இல்லை. அவையும் தாக்குல்களுக்கு இலக்காகின்றன” என்றார்.

SCROLL FOR NEXT