ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என வலியுறுத்தியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் இந்திரேஷ் குமார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். தற்காலிக ஏற்பாடாகவே 370-வது சட்டப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்னும் தொடர்கிறது. நாட்டின் நலன் கருதி அந்த சட்டப்பிரிவின் உபயோகத்தை நிர்ணயிக்க மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்த பிரிவு நாட்டின் நலனுக்கு உகந்ததா, பலன் கொடுத்துள்ளதா என் பதை மறு ஆய்வு செய்ய வேண்டும். அதன் நிறை, குறைகளை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் விரிவான விவாதம் அவசியம்.
இந்த சட்டம் தற்காலிகமான ஏற்பாடு என்றால் இன்னும் தொடர அவசியம் இல்லை. அவசியமானது என்றால் எத்தனை காலத்துக்கு அது தற்காலிக ஏற்பாட்டில் தொடர வேண்டும்? அதை முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலங்களில் நிரந்தரமாக்கி விட்டிருக்கலாம். இது பற்றி விவாதிக்க ஏன் அஞ்சுகிறார்கள்?
இந்த சட்டத்தினால் கிடைத்த பயன்கள் பற்றியும் இழப்பு பற்றியும் விரிவாக விவாதிக்க வேண்டும் என்றார்.