மும்பை அரசு சட்டக்கல்லூரியின் வலைதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தி, அவற்றை அழித்ததற்கான எதிர்வினையா என்று சந்தேகிக்கப்படுகிறது.
கல்லூரியின் வலைதளம் முடக்கப்பட்டுள்ளது குறித்து நேற்று (திங்கள் கிழமை) மாலை நிர்வாகம் அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டது.
சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் மாலை 6 மணியளவில் இணையதளம் முடக்கப்பட்டதைக் கண்டறிந்து, ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். அதற்குப் பிறகு காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது என்று கல்லூரி விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலைதளத்தை முடக்கியவர்கள், அதன் முகப்புப் பக்கத்தில் பாகிஸ்தான் சைபர் கொள்ளைக்காரர்கள் என்று பொருளடங்கிய 'பாக் சைபர் பைரேட்ஸ்' என்ற பெயரில், ''துல்லிய தாக்குதலுக்காக.. எல்லா இந்தியர்களுக்கும்..'' என்று குறிப்பிட்டுள்ளனர்.
சைபர் போர்..
சைபர் போர் முதன்முதலாக அக்டோபர் 3-ம் தேதி, டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வலைதளத்தை முடக்கியதில் தொடங்கியது. இணையதளத்தை முடக்கியவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவான வாசகங்களை முகப்புப் பக்கத்தில் விட்டுச் சென்றனர்.
அடுத்த நாளிலேயே, கேரளாவைச் சேர்ந்த நிறுவனமொன்றின் இணையதளமும் அதே மாதிரியான வாசகங்களை முகப்பில் கொண்டவாறு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.