உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் சமாஜ்வாதி, பாஜக, பிஎஸ்பி, காங்கிரஸ் என 4 முனை போட்டி நிலவும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
இந்நிலையில், பிஎஸ்பியின் நிறுவனர் கன்ஷிராமின் 10-வது நினைவு தினத்தை முன்னிட்டு லக்னோவில் உள்ள கன்ஷிராம் சமரக் மைதானத்தில் நேற்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கிருந் தவர்கள் திடீரென இங்கும் அங்கும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மின்சார வயர் அறுந்து விழுந்ததாக பரவிய வதந்தியே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு லக்னோவில் உள்ள சார்பாக் ரயில் நிலையம் அருகே பிஎஸ்பி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் ஆதரவு தேவை
லக்னோவில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் மாயாவதி பேசியதாவது:
மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான ஆட்சியில் குற்றம், வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் அக்கட்சியில் அதிகார போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சிக்கோ இங்கு அதிக செல்வாக்கு இல்லை.
இதுபோன்ற சூழலில், சமாஜ்வாதி கட்சிக்கோ, காங்கிரஸுக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு சாதமாகிவிடும். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
இதை மனதில் வைத்து முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளை வீணாக்காமல் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 23 சதவீத தலித் வாக்குகள் உள்ளன. இதனுடன் முஸ்லிம் வாக்குகள் சேர்ந்தால் பிஎஸ்பி வெற்றி உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.