கடந்த 29-ம் தேதி காணாமல் போன இந்திய ராணுவ வீரர் சந்து பாபுலால் சவான் தங்களது ராணுவப் பிடியில் இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
எல்லையில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியது. அன்றைய தினம் காஷ்மீரின் மேந்தார் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி அருகே சந்து பாபுலால் சவான் என்ற 22 வயது வீரர் பணியில் இருந்துள்ளார். அப்போது அவர் தவறுதலாக பாகிஸ்தான் எல்லையைத் தாண்டினார். அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப்பிடித்தனர்.
பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ வீரர் ஒருவரை பிடித்துச் சென்றதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தாலும், பாகிஸ்தான் இது குறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தது.
இந்நிலையில், இருநாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் தொலைபேசியில் பேசிக்கொள்ளும்போது சந்து பாபுலால் தங்கள்வசம் இருப்பதாக பாகிஸ்தான் உறுதிப்படுத்தியுள்ளது.
சிறைபிடிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர் சந்து பாபுலால் சவானிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சந்து பாபுலால் சவான் துல்லியத் தாக்குதலில் ஈடுபடவில்லை என இந்திய ராணுவம் தொடர்ந்து கூறிவருகிறது. தவறுதலாக எல்லை தாண்டும் வீரர்களை மீட்பதற்கான வழிமுறைகள் இருப்பதால் சந்து பாபுலால் நிச்சயம் மீட்கப்படுவார் என ராணுவ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்து பாபுலால் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார் என்ற தகவலறிந்த அவரது பாட்டி அதிர்ச்சியில் உயிரிழந்தார். இந்நிலையில் சந்துவை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த மார்ச் மாதம் இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற குல்பூஷண் யாதவ் என்பவர் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது. தற்போது சந்து பாபுலால் யாதவ் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.