சென்னையில் தயாரிக்கப்படும் வாகனங்களை கடல்வழியே குஜராத் கொண்டுவந்து, பின்னர் அங்கிருந்து சாலை வழியே டெல்லி கொண்டுவரும் புதிய திட்டத்தை மத்திய கப்பல் போக்கு வரத்து அமைச்சகம் உருவாக்கி வருகிறது.
எரிபொருள் செலவை குறைக்கும் வகையிலும் நீர்வழிப் போக்குவரத்தை ஊக்கவிக்கும் வகையிலும் இத்திட்டம் தயாரிக் கப்படுகிறது.
இதுகுறித்து கப்பல் போக்கு வரத்துதுறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாட்டின் தெற்குப் பகுதியில் தயாரிக்கப் படும் வாகனங்களை சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களில் இருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் கொண்டுவருவதற்காக சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு எங்களிடம் கூறப்பட்டுள்ளது.
மறு மார்க்கத்தில், டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தயராகும் மாருதி கார் உள்ளிட்ட வாகனங்களை நாட்டின் தெற்குப் பகுதிக்கு கொண்டுசெல்வதும் இத்திட்டத்தின் நோக்கம்” என்றார்.
சாலை மற்றும் கப்பல் போக்கு வரத்து அமைச்சர் நிதின் கட்கரி, இந்த அறிக்கையை தயாரிக்கும் படி அதிகாரிகளை கடந்த வாரம் பணித்தார்.
இதுகுறித்து கட்கரி கூறுகையில், “சாலை வழிப் பயணத்துக்கு கிலோ மீட்டருக்கு ரூ.1.50 செலவாகிறது. இதுவே கடல்வழிப் பயணத்துக்கு 55 காசுகளே செலவாகிறது. மேலும் கடல்வழிப் பயணம் சுற்றுச் சூழலுக்கு உகந்தது” என்றார்.