ஆந்திரா-ஒடிஷா மாநில எல்லை யில் மல்கங்கிரி மாவட்டம், ராம் கூர்கா வனப்பகுதியில் மாவோ யிஸ்ட்களுக்கும், ஆயுதப்படை போலீஸாருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 பெண் மாவோயிஸ்ட்கள் உட்பட மொத்தம் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தெலுங்கு தொலைக்காட்சி சேனல் ஒன்றின் மூலம், ஆந்திர மாநில மாவோ யிஸ்ட்கள் அமைப்பின் பிரதிநிதி ஷியாம் நேற்று கூறியிருப்பதாவது:
மாவோயிஸ்ட்களுக்கு எதிராக நடந்த என்கவுன்டருக்கான பதிலை விரைவில் சந்திரபாபு நாயுடுவுக்கு தெரிவிப்போம். சந்திரபாபு நாயுடு வும், அவரது மகன் லோகேஷும் எங்களிடமிருந்து தப்பிக்க முடி யாது. தேவைப்பட்டால் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தார் மீது தற் கொலைப்படை தாக்குதல் நடத்து வோம். 24 மணி நேரமும், போலீஸ் அல்லது ராணுவத்தினர் இவரை பாதுகாக்க முடியாது.
பிரதமர் மோடி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் சேர்ந்து செய்த சதிதான் தற்போது நடந்துள்ள என்கவுன்டர். மாவோயிஸ்ட்கள் நம்பும் நபர்கள் மூலம் கொண்டு வந்த உணவில் விஷம் கலந்து கொடுக்கச் செய்து 27 பேரை போலீஸார் கொன்றுள்ளனர்.
மேலும் சிலரை போலீஸார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். நடந்தது என் கவுன்டர் அல்ல. இது திட்டமிட்ட கொலை.
மக்கள் பணத்தை கோடி கணக்கில் மோசடி செய்யும் எம்.பி, எம்.எல்.ஏ.க்களை இந்த அரசு கண்டுகொள்வதில்லை. மாறாக மக்களுக்காக போராடும் எங்களை சுட்டுக்கொல்வதா? இவ்வாறு ஷியாம் பேசி உள்ளார்.
கடந்த 2003-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு பட்டு வஸ்திரங்கள் செலுத்த வந்தபோது, அலிபிரி மலைப்பாதையில் முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் காரை மாவோயிஸ்ட்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்க முயற்சித்தனர். இதில் நாயுடு உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.