புதுடெல்லி: பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் ‘சக்திமான்’ புகழ் நடிகர் முகேஷ் கன்னாவுக்கு நெட்டிசன்கள் சமூக வலைதளங்கள் வழியே தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
கடந்த 1997 முதல் 2005 வரையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான தொலைக்காட்சிதான் ‘சக்திமான்’. மொத்தம் 450 எபிசோடுகள். இதில் சூப்பர் ஹீரோவான சக்திமான் கதாபாத்திரத்தில் நடிகர் முகேஷ் கன்னா நடித்திருந்தார். இந்தத் தொடர் இந்தி மொழியில் எடுக்கப்பட்டது. இருப்பினும் தமிழ் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளில் டப் செய்து ஒளிபரப்பப்பட்டது.
அதற்கு காரணம் அந்தக் காலகட்டத்தில் வளர்ந்த குழந்தைகள் மத்தியில் இந்த தொடருக்கு கிடைத்த அமோக வரவேற்பு. 90-களில் வளர்ந்த குழந்தைகளின் விஷ் லிஸ்டில் சக்திமான் இருக்கும். முகேஷை சூப்பர் ஹீரோவாக அவர்கள் பார்த்தனர்.
இப்போது அவர் தனது யூடியூப் சேனலில் பெண்களை குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார். “பாலியல் ரீதியான உறவுக்கு ஆசைப்பட்டு, அதனை ஆண்களிடம் கேட்கும் பெண்கள் பாலியல் தொழிலாளர்களே. ஏனென்றால், நாகரிக சமுதாயத்தைச் சேர்ந்த எந்தவொரு கண்ணியமான பெண்ணும் இப்படி இருக்க மாட்டார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவரது இந்தக் கருத்துக்குதான் நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
“அவரது இந்த லாஜிக்கை கேட்டால் கல்லாதவர்களும் சிரிப்பார்கள்”, “மன்னிக்கவும் சக்திமான். இந்த முறை நீங்கள் நிற்பது அநீதியின் பக்கம்”, “அவரிடம் எந்தவொரு பெண்ணும் அப்படி சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அதன் வெளிப்பாடுதான் இது” என நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.