இந்தியா

தீய சக்தியை வென்றதைக் குறிக்கும் இந்த ஆண்டின் விஜயதசமி தனி சிறப்பானது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

பிடிஐ

இந்த ஆண்டின் விஜயதசமி விழா நம் நாட்டுக்கு மிகவும் சிறப்பானது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது கொள்கைகள் பற்றிய நூல் தொகுப்பை டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:

நாட்டின் ராணுவப் படைகள் திறன் வாய்ந்ததாக இருந்தால்தான் நாடு வலிமையானதாக இருக்கும் என்று உபாத்யாய் அடிக்கடி கூறுவார். போட்டி நிறைந்த இன்றைய சூழலில், நாடு திறன் வாய்ந்ததாகவும் வலிமையானதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

வலிமையாக இருப்பது என்றால் மற்ற நாடுகளுக்கு எதிராக இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல. நமது வலிமையைக் காட்டினால்தான், எதிரிகள் நம் மீது குறிவைக்க தயங்குவர்.

அரசியல் கட்சி என்பது அமைப்பு ரீதியில் இருக்க வேண்டுமே ஒழிய, தனி நபர்களின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் உபாத்யாயின் கொள்கையாக இருந்தது. இதுதான் ஜன சங்கம், பாஜகவின் அடையாளமாக விளங்குகிறது.

உபாத்யாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில், மத்திய அரசு ஏழைகளுக்கு பயனளிக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நாம் விஜயதசமியை கொண்டாட உள்ளோம். இந்த ஆண்டின் விஜயதசமி நமக்கு மிகவும் சிறப்பான நாள் ஆகும். தீய சக்தியை வென்றதைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் இந்த விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 7 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் சமீபத்தில் அதிரடியாக தாக்குதல் நடத்தி அழித்தது. இதை மனதில் வைத்து மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT