கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். 2 ஆண்டுகளை கடந்துள்ள மோடியின் ஆட்சியில் ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர்களாக இதுவரை 4 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மோடி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் முதல் பெண் ஆளுநராக மிருதுளா சின்ஹா, கோவா மாநிலத்தில் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு மே மாதம், திரவுபதி முர்மு என்பவர் ஜார்க்கண்ட் ஆளுநராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம், மணிப்பூர் மாநில ஆளுந ராக நஜ்மா நியமனம் செய்யப்பட் டுள்ளார். இதுபோல் முந்தைய ஆட்சிகள் எதிலும் இந்த எண்ணிக் கையில் பெண்கள் ஆளுநர்களாக அமர்த்தப்பட்டதில்லை.
பெண் ஆளுநர்களில் மிருதுளா சின்ஹா, பிகாரைச் சேர்ந்தவர். அம்மாநில பாஜக மகளிர் அணி பொறுப்பாளராக இருந்தவர். இவரது கணவர் டாக்டர் ராம்கிருபால் சின்ஹா, பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி ஆட்சியில் கேபினட் அமைச்சராக பதவி வகித்தவர்.
ஜார்க்கண்ட் ஆளுநரான திரவுபதி முர்மு, அண்டை மாநிலமான ஒடிசாவை சேர்ந்தவர். அங்கு பிஜு ஜனதா தளம் பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து அமைச்சராக பதவியில் இருந்தார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநரான கிரண்பேடி, கடந்த ஆண்டு திடீரென பாஜகவில் இணைந்தவர். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், கடந்த 2015-ல் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு தோல்வி அடைந்தவர்.
கடைசி நியமனமான நஜ்மா, பாஜகவின் மூத்த தலைவர். மோடி தலைமையில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த இவருக்கு ஆளுநர் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் கிரண்பேடி, புதுச்சேரி மாநில மக்களுடன் இணைந்து தூய்மை இந்தியா திட்டம் உட்பட பிரதமர் மோடியின் அனைத்து திட்டங்களையும் முன் னின்று செயல்படுத்தி வருகிறார். இதுபோல நஜ்மா ஹெப்துல்லாவும் மணிப்பூரில் 24 மணிநேர மருத்துவ சேவையை தொடங்கியுள்ளார்.
இந்தியாவில் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை சரோஜினி நாயுடு பெற்றார். உத்தரப் பிரதேசத்தில் குறுகிய காலம் இவர் பதவியில் இருந்தார். இவரை தொடர்ந்து இதுவரை இந்தியாவில் சுமார் 24 பெண்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.