மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி நீதிமன்றம் நேற்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக அஹமர் கான் என்ற எழுத்தாளர் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2004, 2011 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக தற்போதைய மத்திய அமைச்சராக உள்ள ஸ்மிருதி இரானி தேர்தல் ஆணையத்திடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில் வேண்டுமென்றே பொய்யான கல்வி தகுதியை அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125ஏ பிரிவின் கீழ் அவர் மீது நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் பிறப்பிக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்ற நீதிபதி ஹர்விந்தர் சிங், ‘‘ஸ்மிருதி இரானி தற்போது மத்திய அமைச்சராக இருப்பதால், அவரை துன்புறுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது போல உள்ளது. மேலும் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் தாமதமாக அவருக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டார்.