இந்தியா

உத்தரப் பிரதேச தேர்தல் பிரச்சாரக் களம் காண்கிறார் பிரியங்கா

ஆர்.ஷபிமுன்னா

சோனியா பிறந்த நாள் அன்று அலகாபாத்தில் மாபெரும் கூட்டத்துக்கு ஏற்பாடு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை அடுத்து, பிரியங்கா வதோரா களம் இறங்க உள்ளார். இவரை அம்மாநிலத்தில் சுமார் 150 மேடைகளில் ஏற்ற காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.

முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆளும் உத்தரப் பிரதேசத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கிறது.

இங்கு 1989 ஆம் ஆண்டு வரை தனது 20 முதல்வர்களை காங்கிரஸ் அமர்த்தி இருந்தது. அதன் பிறகு கைவிட்ட ஆட்சியை காங்கிரஸ் மீண்டும் கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக, ராகுல் காந்தி கடந்த மாதம் விவசாயிகளுக்காக கட்டில் சபைகள் நடத்தி இருந்தார். சுமார் 3500 கி.மீ தூரத்திற்கு அவர் செய்தது, அக்கட்சியினால் வெற்றிப் பயணமாகக் கருதப்படுகிறது.

இதையடுத்து உத்தரப் பிரதேச பிரச்சாரத்தில் அவரது சகோதரியான பிரியங்காவை களம் இறக்கத் தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சியால் அமர்த்தப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் இதற்காக அதிரடித் திட்டங்கள் தீட்டி வருகிறார்.

இது குறித்து 'தி இந்து'விடம் காங்கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறுகையில், "உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளும் பிரியங்காவிற்காக குறைந்தது 150 மேடைகளில் பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது..

சோனியாஜியின் பிறந்த நாளான டிசம்பர் 9 அன்று இந்த பிரச்சாரம் அலகாபாத்தின் பிரம்மாண்டமானக் கூட்டமாக துவக்க வாய்ப்புள்ளது. இதற்கான முன் ஏற்பாடுகள் செய்ய அவர் கடந்த வாரம் அலகாபாத் சென்றிருந்தார். இதுவும் முதல்கட்டப் பிரச்சாரம் தான் அதன் பிறகு மீண்டும் சட்டப்பேரவை தேர்தல் வரை மேலும் பல கூட்டங்களில் அவர் கலந்து கொள்வார்" எனத் தெரிவித்தனர்.

நேரு குடும்பத்தின் சொந்த ஊரான அலகாபாத்தில் அவர் வாழ்ந்த ஆனந்த பவன் இல்லம் உள்ளது. எனவே, இங்கிருந்து தன் பிரச்சாரம் துவக்கும் பிரியங்கா தான் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதை உணர்த்தி வாக்கு சேகரிக்க உள்ளார்.

ராகுல் செய்த பிரச்சாரத்திற்கு பின் உத்தரப் பிரதேச காங்கிரஸிடம் உத்வேகம் கிளம்பியுள்ளது. இதை தேர்தல் வரை நிலைக்க வைக்க பிரியங்காவின் பிரச்சாரம் பலன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் மக்களவை தேர்தல்களில் தன் தாய் சோனியா காந்தி மற்றும் சகோதரர் ராகுலின் தொகுதிகளான ரேபரேலி மற்றும் அமேதி ஆகியவற்றில் மட்டும் பிரச்சாரம் செய்து வந்தார்.

இதைத் தாண்டி உத்தரப் பிரதேசம் முழுவதிலும் பிரியங்கா அதன் சட்டப்பேரவை தேர்தலுக்காக முதன்முறையாகப் பிரச்சாரம் செய்ய உள்ளார். இது உத்தரப் பிரதேச காங்கிரஸார் இடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT