‘ஊழல் இந்தியா’ என்று படிந்துள்ள பிம்பத்தை, ‘திறன்மிகு இந்தியா’ என்று மாற்றும் கனவை நனவாக்குவேன் என்று மக்களவையில் ஆற்றிய தனது முதல் உரையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி மேலும் பேசிய தாவது:
வேளாண்மையையும், உள்கட்டமைப்பையும் மேம்படுத்து வேன். ஏழைகளுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த எனது தலைமையிலான அரசு முன்னுரிமை கொடுக்கும். நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண் டாடும் 2022-ம் ஆண்டின்போது, அனைவருக்கு கழிவறையுடன் கூடிய வீடு, தண்ணீர், மின்சாரம் ஆகிய வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்வோம்.
நாங்கள் மாற்றத்தைக் கொண்டு வருவோம். ஆனால், உங்களை (எதிர்க்கட்சிகள்) விட்டுவிட்டுச் செல்ல மாட்டோம். எம்.பி.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முக்கிய முடிவு களை எடுப்பதைவிட, அனை வரது பங்களிப்புடன் முடிவு எடுப்பதைத்தான் நான் விரும்புகிறேன்.
சிறுபான்மையினர் நலன்
பாஜக ஆட்சியில் சிறுபான்மையினரின் நலன் கேள்விக்குறியாகியுள்ளதாக உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர். சிறுபான்மையினரின் மேம் பாட்டுக்காக எனது அரசு பாடுபடும். உடலில் ஒரு அங்கம் மட்டும் பலவீனமாக இருந்தால், அந்த உடலை ஆரோக்கியமானது என்று யாரும் கூற மாட்டார்கள். சிறுபான்மையினர் நலன் தொடர்பாக நான் பேசியது, ஏதோ சமாதானம் செய்வதற்காக கூறப்பட்ட வார்த்தைகள் அல்ல. நாங்கள் இதை (சிறுபான்மை யினர் மேம்பாடு) எங்களின் கடமை யாக ஏற்றுச் செயல்படுத்துவோம். முஸ்லிம் சகோதரர்களின் வாழ்க் கையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறப்பு கவனம் செலுத்துவோம். வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும் போது, அவர்களை மட்டும் விட்டுவிட முடியாது.
காந்தியின் கனவு
தேர்தலில் வெற்றி பெறுவதுகூட நமக்கு பாடத்தை கற்றுக்கொடுக்கும். அதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் பெற்றுள்ள வெற்றி, எங்களுக்கு பணிவைக் கற்றுத் தந்துள்ளது. மூத்தவர்களிடமிருந்து கிடைத்துள்ள ஆசிகளால், எங்களுக்கு ஆணவம் ஏற்பட வில்லை.
மகாத்மா காந்தியின் கனவை நனவாக்குவோம். அதில் சில சங்கடங்கள் நேரலாம். ஆனால், உங்களின் ஒத்துழைப்புடன் அதை நிறைவேற்றுவோம். சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மகாத்மா காந்தி மாற்றியதைப் போல, வளர்ச்சி தொடர்பான செயல்பாடு களையும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.
விமர்சனங்களை வரவேற்கிறோம்
முக்கிய முடிவுகளை தைரிய மாக எடுக்க வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. விமர் சனங்களால் நான் சோர்ந்துவிட மாட்டேன். விமர்சனங்களை வரவேற்கிறேன். சிறந்த விமர்சனங்கள் நாட்டுக்கு நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும். ஜனநாயகத்தில் விமர்சனங்கள் நமக்கு பலத்தை அளிக்கிறது; நம்மை வழிநடத்துகிறது.
நாடாளுமன்றத்தில் அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே அவ்வப்போது வாதப் பிரதிவாதங்கள் நடைபெறலாம். ஆனால், நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதில், எதிர்க்கட்சிகளையும் எங்களுடன் சேர்த்தே அழைத்துச் செல்வோம்.
மாநில அரசுகளிடம் எஜமானர் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதை நாங்கள் விரும்ப வில்லை. பரஸ்பர ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சியைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.
குடியரசுத் தலைவர் உரையில் தெரிவிக்கப்பட்டதை நிறைவேற்ற முழுமையான முயற்சியை மேற்கொள்வோம் இவ்வாறு மோடி பேசினார்.