ராஜஸ்தானில் தொண்டரின் வீட்டு துக்க விசாரிப்புக்கு வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது மை வீசிய, ஏபிவிபி அமைப்பினர் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலுக்காக பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், இதுதொடர்பாக பாகிஸ்தான் மற்றும் சர்வதேச ஊடகங்கள் எழுப்பும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் கோரினார்.
இதனால், இந்திய ராணுவத்தை அவமதித்துவிட்டதாக கேஜ்ரிவாலுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தனது கட்சித் தொண்டரின் இல்லத்தில் துக்க விசாரிப்புக்காக ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்துக்கு அரவிந்த் கேஜ்ரிவால் செவ்வாயன்று வந்தார்.
ஜோத்பூரில் இருந்து பிகானேர் வரும்போது, நோகா நகரில் கேஜ்ரிவாலுக்கு எதிராக வலதுசாரி அமைப்பினர் சார்பில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து பிகானேர் மாவட்டத்தின் டிரான்ஸ்போர்ட் நகரில் கேஜ்ரிவால் மீது சிலர் மை வீசி தாக்குதல் நடத்தினர்.
கேஜ்ரிவால் மீது மை வீசிய, ஏபிவிபி (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) அமைப்பைச் சேர்ந்த தினேஷ் ஓஜா மற்றும் விக்ரம் சிங் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, ‘என் மீது மை வீசியவர்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.