இந்தியா

கால வெள்ளத்தில் மறைந்த சரஸ்வதி நதியை தேடும் விஞ்ஞானிகள்

செய்திப்பிரிவு

சரஸ்வதி நதி குறித்த ஆய்வுகளுக்காக, ஹரியாணா-இமாச்சலப் பிரதேச எல்லையில் உள்ள அடி பத்ரியில் இருந்து மணல், சரளைக் கற்கள், வண்டல் மண், நீர் மாதிரிகள் உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் சேகரித்து நவீன ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்து மதத்தில் மிக முக்கிய இடம் பெற்றுள்ள சரஸ்வதி நதி, யமுனைக்கு கிழக்கிலும், சட்லெஜ் நதிக்கு மேற்கிலும் பாய்ந்ததாக, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் புவியியல் மாற்றங்களால் சரஸ்வதி நதி பாலைவனத்தில் வறண்டு விட்டதாகவும் மகாபாரதம் உள்ளிட்ட புராணங்கள் தெரிவிக்கின்றன.

அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் கங்கை, யமுனை நதிகளுடன் கண்ணுக்கு புலப்படாத வகையில் சரஸ்வதி நதி வந்து கலக்கிறது என்ற நம்பிக்கையும் இந்து மதத்தில் இருந்து வருகிறது. இமயத்தில் தோன்றி பஞ்சாப், ஹரியாணா ஊடாக பாலைவனத்தில் மறையும் பருவ கால ஆறான காகர் நதியே சரஸ்வதி நதியாக இருக்கலாம் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் உள்ளிட்டவை செயற்கைகோள் உதவியுடன் மேற்கொண்ட ஆய்வுகளில், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் பகுதிகளில் சரஸ்வதி நதி பாய்ந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இமாச்சலப் பிரதேச எல்லையை ஓட்டி, ஹரியாணாவின் யமுனா நகர் மாவட்டத்தில் உள்ள அடி பத்ரியில் தோன்றி குருஷேத்ரா மாவட்டம் வரை சரஸ்வதி நதி பாய்வதாக தற்போது வருவாய் துறை பதிவேடுகளில் குறிக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

சரஸ்வதி மீட்பு திட்டம்

இதுதொடர்பான ஆய்வுகளுக்காக 2002-ம் ஆண்டில் அப்போதைய பாஜக அரசு சார்பில் சரஸ்வதி பாரம்பரிய மீட்பு திட்டம் உருவாக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடந்தன. ஆனால், பின்னர் வந்த காங்கிரஸ் அரசு அத்திட்டத்தை அறிவியலுக்கு முரணானது எனக் கூறி கைவிட்டது.

எனினும், ஹரியாணா அரசு சார்பில், ஹரியாணா சரஸ்வதி பாரம்பரிய வளர்ச்சி வாரியம் அமைக்கப்பட்டு இதுதொடர்பான பணிகள் நடந்துவருகின்றன. இதில் தங்களுக்கு உதவுமாறு டேராடூனில் உள்ள வாடியா இமாலய நில ஆய்வியல் மையத்தை வாரியம் அணுகியது.

இதன் படி, மையத்தின் இயக்குனர் ஏ.கே.குப்தா தலைமையில் விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டு, கடந்த மாதம் அடி பத்ரி மற்றும் பிலாஸ்பூர் பகுதியில் முதல் முறையாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, நீர், சரளை, வண்டல் மண், மணல் உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்த விஞ்ஞானிகள் குழு, அவற்றை நவீன முறைகளில் ஆய்வக பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம், சரஸ்வதி நதி குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என, அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானி சந்தோஷ் ராய் கூறும்போது, ‘தற்போதுள்ள தகவல்களின் படி, அடி பத்ரியில் தான் சரஸ்வதி தோன்றியிருக்கக் கூடும். எனினும் வற்றாத நதியாக இருக்கிறபட்சத்தில் சில நிரந்தர மூலங்கள் இருந்தாக வேண்டும். அந்த மூலங்களை கண்டுபிடிக்க இமயத்தின் மேல் மற்றும் கீழ் தட்டில் மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்துகிறோம்.

இழந்த நதியின் அடையாளங்களை முதலில் ஆங்காங்கே கண்டுபிடிக்க வேண்டும். பின்னர் தொடர்ச்சியாக மண்ணை தோண்டியெடுத்து, அவற்றை இணைத்து முறையான வடிவத்தைக் கொடுக்கவேண்டும்.

பூகம்ப பாதிப்புகளின் விளைவாக சரஸ்வதி நதி வறண்டுபோய்விட்டதா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். அதேபோல், சரஸ்வதி நதியின் தோற்றுவாய் மற்றும் பாதையை அறிய மத சம்பிரதாயங்களையும் கவனித்து வருகிறோம்’ என்றார்.

கற்பனையல்ல: வல்லுனர் குழு அறிக்கை

புதுடெல்லி

‘சரஸ்வதி நதி இமயத்தில் தோன்றி, ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் வடக்கு குஜராத்தில் பாய்ந்து, மேற்கு கடலில் கலந்தது உண்மை தான்’ என, மத்திய அரசிடம் வல்லுனர் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

பேராசிரியர் கே.எஸ்.வால்டியா தலைமையிலான வல்லுனர் குழு கடந்த ஆறு மாதங்களாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் மத்திய அரசிடம் நேற்று தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

அதில், ‘சரஸ்வதி நதி இருந்தது உண்மையே என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இமயத்தில் தோன்றி, கட்ச் பாலைவனம் வழியாக மேற்கு கடலில் கலக்கும் முன்பாக, பாகிஸ்தானின் சில பகுதிகளையும் கடந்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அதன் நீளம் சுமார் 4,000 கிமீ.

நதியின் மூன்றில் ஒரு பகுதி தற்போதைய பாகிஸ்தானிலும், மூன்றில் இரு பகுதியான, 3,000 கிமீ இந்தியாவிலும் இருந்துள்ளது. இந்நதியின் கரையோரத்தில் சுமார் 1,700 சிறு மற்றும் பெரிய நகரங்களும், கிராமங்களும் அமைந்திருந்தன. அவை 5,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும்‘ எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்பதால், இவ்விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.

-பிடிஐ

SCROLL FOR NEXT