இந்தியா

மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு உ.பி. உட்பட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி, மார்ச்சில் தேர்தல்

பிடிஐ

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்த பிறகு, உத்தரப் பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மே மாதம் 27-ம் தேதி முடிவடைகிறது. பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 3 மாநில சட்டப் பேரவைகளின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் 18-ம் தேதி முடிகிறது. உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் மார்ச் 27-ம் தேதி முடிகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களுக்கும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டது.

7 கட்டத் தேர்தல்

பஞ்சாப், கோவா, உத்தரா கண்ட், மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறலாம் என்று மத்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் டெல்லியில் நேற்று தெரிவித்தன. மேலும் 5 மாநிலங்களின் சட்டப் பேரவை பதவிக் காலம் முடிவடைவதற்குள், தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, மார்ச் மாதம் 2-வது வாரத்தில் 5 மாநிலங்களிலும் தேர்தலை முடிப்பதற்காக, தேர்தல் தேதிகளை இறுதி செய்யும் பணியில் தேர்தல் ஆணையர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதே சத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 80 எம்.பி. தொகுதிகளில் பாஜக 70 இடங்களை கைப்பற்றியது.

கட்சிகள் வியூகம்

அதேபோல் இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆளும் சமாஜ்வாதி கட்சியும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் சவால் விடுக்கும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார்.

பஞ்சாபை பொறுத்த வரையில் கடந்த 2 முறை சிரோன்மணி அகாலி தளம் பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்தன. இந்த முறை இந்தக் கூட்டணிக்கு காங்கிரஸ் மிகப் பெரும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆம் ஆத்மியும் அகாலி தள கூட்டணிக்கு சவாலாக இருக்கும்.

SCROLL FOR NEXT