இந்தியா

ஆதீர் ரஞ்சன் சவுத்ரியை தொடர்ந்து சர்ச்சையில் சோனியா காந்தி: பாஜகவினர் சாடல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவை காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவரை தரக்குறைவாக விமர்சித்ததாக எழுந்த சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில், சோனியா காந்தி மீது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

முன்னதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் பேசும்போது குடியரசுத் தலைவரை ராஷ்ட்ரபதி என்று சொல்வதற்குப் பதிலாக ராஷ்ட்ரபத்னி என்று சொல்லிவிட்டார். "இது வாய் தவறி நிகழ்ந்துவிட்டது. எனக்கு குடியரசுத் தலைவரை அவமதிக்கும் எண்ணமில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்" என்று அவர் கூறியிருந்தாலும் கூட பாஜகவினர் இது திட்டமிட்டே பேசப்பட்ட பேச்சு என்று கூறி பாஜகவினர் நாடாளுமன்றத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோனியா ஆவேசம்: இந்நிலையில், மக்களவையில் சக உறுப்பினரிடம் சோனியா காந்தி ஆவேசமாக நடந்து கொண்டார் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஆதீர் ரஞ்சன் சவுத்ரி பேச்சைக் கண்டித்து உரையாற்றிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, "குடியரசுத் தலைவரை காங்கிரஸ் எம்.பி. அவமதித்துவிட்டார். அவர் சார்ந்த கட்சியின் தலைவரே ஒரு பெண் தான். அப்படியிருக்க அவரும் ஒரு பெண்ணை இழிவுபடுத்த அனுமதித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஆதீர் ரஞ்சன் சவுத்ரியும் மன்னிப்பு கேட்க வேண்டும், சோனியா காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பேசினார்.

இந்த உரைக்குப் பின்னர் சோனியா காந்தி பாஜக எம்.பி. ரமாதேவியிடம் பேசியுள்ளார். அப்போது, "நான் இதில் சம்பந்தப்படவே இல்லை. என் பெயரை ஏன் இழுக்கிறீர்கள்" என்று கேட்டுள்ளார். அப்போது ஸ்மிருதி இராணி குறுக்கிட 'நீங்கள் என்னிடம் பேசாதீர்கள்" என்று கோப ஆவேசத்துடன் சோனியா கூறியுள்ளார் என்பதே பாஜகவினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

அதுவும் குறிப்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "சோனியா காந்தி எங்கள் கட்சி உறுப்பினரிடம் கோப ஆவேசத்துடன் நடந்து கொண்டிருக்கிறார். ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு அவர் இப்படி செயல்பட்டுள்ளார். நீங்கள் நம்ப மாட்டீர்கள், எனது கட்சி உறுப்பினர் அவரிடம் பேச முற்பட்டபோது நீங்கள் என்னிடம் பேசாதீர்கள் என்று ஆவேசத்துடன் சொல்லி அவையில் அவரது மாண்பை சிறுமைப்படுத்தியுள்ளார்" என்று கூறினார்.

ஆதீர் ரஞ்சன் பேச்சு ஒருபுறம், சோனியா பேச்சு மறுபுறம் என்று எதிர்க்கட்சிகளின் அமளியை முடக்கும் அளவுக்கு ஆளும் பாஜகவினர் இப்போது நாடாளுமன்றத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT