இந்தியா

போர் அறை தகவல்கள் கசிவு வழக்கில் சிபிஐ.க்கு ரூ.5,000 அபராதம்: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

போர் அறை தகவல்கள் கசிந்தது தொடர்பான வழக்கில், கால தாமதம் செய்ததற்காக சிபிஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் ரூ.5,000 அபராதம் விதித்துள்ளது.

இந்திய கப்பற்படைக்கு தேவையான ஆயுதங்கள் என்னென்ன, பலவீனமாக இருக்கும் பகுதிகள் எவை, அவற்றைச் சரி செய்வது எப்படி என்ற விவரம் அடங்கிய ராணுவ ரகசிய ஆவணங்களை உயர் அதிகாரிகள் கடத்தியது கடந்த 2006-ம் ஆண்டு அம்பலமானது. ரகசிய தகவல்களை ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், இடைத்தரகர்களுக்கு விற்கப்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை, ‘போர் அறை தகவல்கள் கசிவு வழக்கு’ என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கில் முன்னாள் ராணுவ அதிகாரி குல்பூஷண் பிரசார், முன்னாள் கமாண்டர் விஜேந்திர ரானா, பணி நீக்கம் செய்யப்பட்ட கமாண்டர் வி.கே.ஜா, விமானப்படை முன்னாள் கமாண்டர் சம்பாஜி சர்வே, ஆயுத தரகர் அபிஷேக் வர்மா ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இவர்களில் பிரசார், சர்வே, ரானா, அபிஷேக் வர்மா ஆகியோர் ஜாமீனில் உள்ளனர்.

இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முக்கிய சாட்சியான கமாண்டர் அதுல் நாக் ஆஜரானார்.

ஆனால், சிபிஐ தரப்பு சிறப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்குப் பதில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் மோகன் கூறும்போது, ‘‘சிறப்பு வழக்கறிஞர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வேறு வழக்குக்காக ஆஜராகி உள்ளார். பிற்பகலில் அவர் வந்துவிடுவார்’’ என்று தெரிவித்தார்.

அதை கேட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் அகர்வால், ‘‘சாட்சிகள் காலையில் இருந்து காத்திருக்கின்றனர். இனிமேல் காத்திருக்க அவர்களால் முடியாது என்று கூறுகின்றனர். எனவே, நீதிமன்றத்தின் காலத்தை வீணடித்ததற்காக சிபிஐ.க்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் இருந்து சிறப்பு வழக்கறிஞரை விடுவிக்க வேண்டும். வழக்கு அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது வேறு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

அத்துடன் வழக்கு விசாரணையை அக்டோபர் 17-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT