தீவிரவாதிகள் முகாம்கள் மீது நடத்திய தாக்குதலை அடுத்து, பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டு, இந்தியாவுக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருக்கும் தகவல் ராணுவத்துக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து புதன்கிழமை நள்ளிரவு இந்திய விமானப் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இந்திய பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே நிலவும் சூழ்நிலை குறித்து ஆராய, மத்திய பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று அவசரமாக நடந்தது. இந்தக் கூட்டத்தில் உரி தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் இறந்தது, அதன்பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தற்போது எல்லையில் காணப்படும் சூழ்நிலை, தீவிரவாத முகாம்களை அழித்ததால் ஏற்பட்ட மாற்றங்கள், பின்விளைவுகள், அவற்றைச் சமாளிக்கும் வழிமுறைகள் உட்பட அனைத்து அம்சங்கள் குறித்தும் பிரதமர் மோடி விரிவாக ஆலோசனை நடத்தினார்.
இந்திய பாகிஸ்தான் எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். அத்துடன் இந்திய பகுதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவத்தினர் உதவி வருகின்றனர். இந்த விஷயங்கள் குறித்தும் மோடி விரிவாக ஆலோசனை நடத்தினார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே சண்டை நிறுத்தத்தை மீறி நேற்று முன்தினம் கூட 2 முறை பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதேபோல் காஷ்மீரின் நவ்காம் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் நேற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதுபோல் தொடர்ந்து அத்துமீறினால் இந்திய ராணுவத்தினர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மோடி தீவிரமாக ஆலோசனை நடத்தி உள்ளார்.