ஜாமீன் நீட்டிப்பு கோரி தருண் தேஜ்பால் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வரும் 27-ம் தேதி வரை அவரது இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
தெஹல்கா நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் அதன் நிறுவனர் ஆசிரியர் தருண் தேஜ்பால் கடந்த நவம்பர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது தாய் கடந்த மே 18-ம் தேதி மரணமடைந்ததால் அவருக்கு உச்ச நீதிமன்றம் மூன்று வாரம் ஜாமீன் வழங்கியது.
தருண் தேஜ்பால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் நீட்டிப்பு கோரி திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார்.
‘உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் தாயின் இறுதிச் சடங்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. தாய் மரணத்தையடுத்து குடும்பத்தினருடன் அவர் தொடர்ந்து இருக்க வேண்டியிருப்பதால் ஜாமீனை மேலும் ஆறு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்’ என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் தேஜ்பாலுக்கு வரும் 27-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.