குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவிடம் டெல்லியில் நேற்று மாநிலங்களவை செயலரும், குடியரசுத் தலைவர் தேர்தல் அதிகாரியுமான பி.சி.மோடி சான்றிதழை வழங்கினார்.படம்: பிடிஐ 
இந்தியா

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு நாளை மறுநாள் பதவியேற்பு - நாடாளுமன்றத்தில் விழா ஏற்பாடுகள் மும்முரம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு நாளை மறுநாள் பதவியேற்கிறார். இதற்காக நாடாளுமன்ற மைய மண்டபத்தில் விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

தேர்தலை நடத்திய அதிகாரி பி.சி.மோடி, புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவை டெல்லியில் அவரது வீட்டில் நேற்று சந்தித்து தேர்தல் வெற்றிக்கான சான்றிதழை வழங்கினார்.

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு நாளை மறுநாள் காலை 10 மணி அளவில் பதவியேற்கிறார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். ஓய்வு பெறும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், தலைவர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்ற பிறகு அவருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படும். இதன்பிறகு அவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறுவார்.

நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர், 2-வது பெண் குடியரசுத் தலைவர், சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்த முதல் குடியரசுத் தலைவர் என பல்வேறு பெருமைகளை திரவுபதி முர்மு பெறுகிறார்.

SCROLL FOR NEXT