பிரதமர் நரேந்திர மோடி ஒரு ‘சுயமோக அடிமை’ என்றும் அதிபர் போன்று தனி நபர் ஆட்சி நடத்துகிறார் என்றும் இது இந்தியாவுக்கு ஆபத்தானது என்றும் அருண் ஷோரி கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் சுமார் 40 நிமிடங்கள் அருண் ஷோரி பேசியது பற்றிய செய்தி அறிக்கையில் அவர் கூறியதாவது:
மோடியின் மீதமிருக்கும் 3 ஆண்டுகால ஆட்சியில் மேலும் மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் அழிதொழித்து விடுவார். அவர்களுக்கு அசவுகரியமாக தெரியும் குரல்களை அடக்கி ஒடுக்குவார்.
அளவுக்கதிகமான சுய-காதல், சுய-மோகம் பீடித்தவர் மோடி. எந்த ஒரு நிகழ்வையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளவே முயற்சி செய்வார். மக்கள் குறித்த பிரதமர் மோடியின் அணுகுமுறை பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறியும் தன்மை கொண்டது. மக்களை காகித நேப்கின்களாக பயன்படுத்துபவர் மோடி.
அகஸ்டாவெஸ்ட்லேண்ட் காப்டர் ஊழலில் மனோகர் பாரிக்கரின் கருத்துகள் எலியை பிடிக்க மலையை குடையும் செயலாகும். ஆனால் அதுவும் அவர் குறிப்பிட்டது போலவே கண்ணுக்குப் புலப்படாத எலியே.
இரண்டு ஆண்டுகால அவரது ஆட்சி அனைவருக்கும் எதிரான குத்துச் சண்டை போட்டியாகவே உள்ளது. நாம் அவரிடம் என்ன எதிர்பார்த்தோம் என்பதிலிருந்து அவரது கவனம் திசை திரும்பி விட்டது. கிடைத்த வாய்ப்பு முழுமையாக நழுவவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கர்வாப்ஸி, லவ்-ஜிஹாத், மாட்டிறைச்சி தடை, விருதுகள் திரும்ப அளிக்கப்படுதல், தேசவிரோதத்துக்கு எதிரான பிரச்சாரம், பாரத் மாதா கி ஜெய், மாணவர்கள் போராட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டவை.
அவரது கொள்கை பிரித்தாளும் கொள்கையே. அருணாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் ஆட்சியைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்தது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.
வெளியுறவிலும் பாகிஸ்தான் மத்தியில் நம்மை நாமே முட்டாள்களாக்கிக் கொள்வதாகத்தான் மோடி அரசின் கொள்கைகள் உள்ளன.
மொத்தத்தில் மோடி அரசு தனது கொள்கைகளில் தீவிரமாகச் செயல்படுவதில்லை. வரி விவகாரங்களை சரியாகக் கையாளவில்லை, வங்கிகள் நெருக்கடியையும் சரிவரக் கையாளவில்லை. வங்கிகள் நெருக்கடி விவகாரத்தில் மோடி அரசு கடும் அலட்சியமாகச் செயல்பட்டது, பொறுப்பற்ற முறையில் கையாள்கிறது
இவ்வாறு கடுமையாகத் தாக்கியுள்ளார் அருண் ஷோரி.