எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா டெல்லியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அவருடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வெற்றி சின்னத்தைக் காட்டினர். படம்: பிடிஐ 
இந்தியா

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: மார்கரெட் ஆல்வா வேட்பு மனு தாக்கல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடுவின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பாஜக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஜெகதீப் தன்கர் நேற்று முன்தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா மனு தாக்கல் செய்தார்.

அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் மார்கரெட் ஆல்வா கூறும்போது, “இந்த தேர்தல் கடினமானது என்று எனக்கு தெரியும். ஆனால், அரசியலில் வெற்றி, தோல்வி என்பது ஒரு பிரச்சினை அல்ல. போரில் ஈடுபட வேண்டியது அவசியம். நான் யாரைக் கண்டும் பயப்படமாட்டேன்” என்றார்.

SCROLL FOR NEXT