பெங்களூருவில் உள்ள கைகொண்டனஹள்ளியில் சந்திர பிரகாஷ் சிங் (32) என்பவர் தனது மனைவி சுனிதா சிங் (28) உடன் வசித்து வருகிறார். மென்பொருள் பொறியாளர்களான இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 4-ம் தேதி இரவு 11 மணியளவில் சுனிதா சிங் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டு இருந்தார். அப்போது சந்திர பிரகாஷ் சிங், இரவுக்கு சாப்பிட என்ன இருக்கிறது?' என கேட்டதற்கு, எதுவும் சமைக்கவில்லை என சுனிதா சிங் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்திர பிரகாஷ் சிங், எதுவும் சமைக்காமல் யாருடன் சாட் செய்து கொண்டிருக்கிறாய்? என மனைவியின் செல்போனை பிடுங்கி பார்த்துள்ளார்.
இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த சந்திர பிரகாஷ் சிங், மனைவியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுனிதா சிங் கத்தியால் கணவரின் கை விரல்களை வெட்டியுள்ளார். இதனால் அவரது வலது கையில் உள்ள 3 விரல்களில் ரத்தம் கொட்டியது. இதையடுத்து சந்திர பிரகாஷ் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இருவரும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.