உத்தராகண்ட் சட்டப்பேரவையில் முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமை யிலான அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வுள்ளது. இதில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 9 எம்எல்ஏக்கள் வாக் களிக்க விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்துள்ளது. இத்தீர்ப்பு, ஹரீஷ் ராவத் தரப்புக்கு சாதகமாகவும், மத்திய அரசுக்கு பின்னடைவாகவும் அமைந்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில், ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, அரசுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 9 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் படவிருந்த நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டதை எதிர்த்து, ஹரீஷ் ராவத் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், மே 10-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.
ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 எம்எல்ஏக்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படாவிட்டால் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப் பில் பங்கேற்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
எனவே, தங்களைத் தகுதி நீக்கம் செய்த பேரவைத் தலைவரின் உத்தரவுக்கு எதிராக, 9 எம்எல்ஏக்கள் உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.
அவர்களின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி யு.சி. தியானி, மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார். விரும்பினால், பேரவைத் தலைவர் கோவிந்த் சிங் குஞ்ச்வாலை அணுகி நிவாரணம் பெற அறிவுறுத்தினார்.
மேல்முறையீடு
இதைத்தொடர்ந்து நேற்று உடனடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை 9 எம்எல்ஏக் களின் தரப்பு அணுகியது. அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 6-ம் தேதி உத்தரவிட்ட அதே அமர்வை அணுகும்படி தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் அறிவுறுத்தினார்.
எம்எல்ஏக்களின் மேல்முறை யீட்டை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவ கீர்த்தி சிங் ஆகியோர டங்கிய அமர்வு, உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இதன் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 எம்எல்ஏக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாது.
70 பேர் கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 9 பேர் தகுதி நீக்கம் காரணமாக 61 பேராக குறைந்துள்ளது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 31 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 33 எம்எல்ஏக்களின் ஆதரவு ஹரீஷ் ராவத்துக்கு உள்ளது. பாஜகவுக்கு 28 பேரின் ஆதரவுதான் உள்ளது. எனவே, ராவத் ஆட்சி தப்பிப் பிழைத்து விடும்.
சிறப்பு பார்வையாளர்
காலை 11 மணி முதல் 1 மணி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். வாக்கெடுப் புக்கான சிறப்பு பார்வையாள ராக நாடாளுமன்ற விவகாரங்களுக் கான முதன்மைச் செயலாளர் ஜெய்தேவ் சிங் நியமிக்கப்பட்டுள் ளார். இதுதொடர்பான மத்திய அரசின் மனுவை ஏற்று இந்த நியமனத்தை உச்ச நீதிமன்றம் மேற்கொண்டுள்ளது. அவருடன் உத்தராகண்ட் சட்டப்பேரவை முதன்மைச் செயலாளரும் இணைந்து வாக்கெடுப்பை கண் காணிப்பார்.
வாக்கெடுப்பு வீடியோவில் பதிவு செய்யப்பட உள்ளது.