இந்தியா

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் விவகாரம்: பிரதமர் மோடிக்கு எதிராக காங். உரிமை மீறல் நோட்டீஸ்

பிடிஐ

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் விவகாரத்தில் சோனியா காந்தியைத் தொடர்புபடுத்தி பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருப்பது தொடர்பாக பிரதமர் மீது காங்கிரஸ் இரு அவைகளிலும் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது.

இவ்விவகாரம் செவ்வாயன்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிரொலித்தது.

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் உறுப்பினர் சாந்தாராம் நாயக் பேசும்போது, ''தேர்தல்பிரச்சாரத்தில் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் தொடர்பாக பேசும்போது, காங்கிரஸ் தலைவர்கள் லஞ்சம் வாங்கியதாக குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோர் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளதாக தெரிவித்தார். அவைக்கு வெளியே இதுதொடர்பாக பேசியதால் உரிமை மீறல்'' என அவர் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, “ஓர் அரசியல்வாதி மற்றொரு அரசியல்வாதிக்கு எதிராக அவைக்கு வெளியே பேசுவது எப்போதிருந்து உரிமை மீறலாக அர்த்தம் கொள்ளப்படுகிறது” எனக் கேள்வியெழுப்பினார்.

மேலும், “நேற்று ஊடகத்தின் முன் நாள் முழுக்க காங்கிரஸ் பேசியதைப்போல, அவைக்கு வெளியே பேசும் அரசியல் பேச்சுகள், விளம்பரத்துக்காக பேசப்படுபவை” என்றார்.

அப்போது அவை துணைத்தலைவர் பி.ஜே. குரியன் பூஜ்ஜிய நேரத்தில் அனுமதிக்கப்பட்டதை மட்டும் பேச வேண்டும். உரிமை மீறல் நோட்டீஸ் போன்ற பிற பிரச்சினைகளை எழுப்பக் கூடாது என நாயக்கைப் பார்த்து அறிவுறுத்தினார்.

காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா பேசும்போது, “பிரதமராக அவைக்கு உள்ளேயும், வெளியேயும் பேசும்போது அவரை மற்றவர்களிடமிருந்து விதிவிலக்காக கருதமுடியாது” என்றார்.

அதற்கு பதிலளித்த அருண் ஜேட்லி, “அவைக்கு வெளியே அல்லது உள்ளே ஊழலுக்கு எதிராகப் பேச பிரதமருக்கு உரிமை உள்ளது. அவருக்கு வாய்ப்பூட்டுச் சட்டம் போடமுடியாது” என்றார்.

இதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக கருத்து கூற எந்த உறுப்பினரையும் குரியன் அனுமதிக்கவில்லை மக்களவையில், காங்கிரஸ் எம்.பி. வீரப்ப மொய்லி, பிரதமர் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.


நோட்டீஸ் பரிசீலனையில் இருப்பதாகவும், அதன் மீது முடிவெடுத்த பிறகே பேச அனுமதிக்கப்படும் எனவும் மக்களவை அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறினார்.

வீரப்ப மொய்லி ஒழுங்கு நடவடிக்கையாக எடுக்க விரும்பியபோது, அதனை சுமித்ரா மகாஜன் மறுத்து, பூஜ்ஜிய நேரத்தில் அதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டார்.

காங்கிரஸ் எம்.பி. ரவ்நீத் சிங், தனது நேரத்தில் இதுதொடர்பாக பேச முயன்றார். வேறு பிரச்சினைகள் குறித்து பேசும்படி அவருக்கு சுமித்ரா மகாஜன் அறிவுறுத்தினார்.

இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையத்துக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். ஜனநாயகப் படுகொலையை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறி அவர்கள் கோஷமிட்டனர். இதனை சோனியா காந்தி பார்த்துக் கொண்டிருந்தார்.

காங்கிரஸ் உறுப்பினர்களின் அமளிக்கிடையே பூஜ்ஜிய நேரம் தொடர்ந்தது.

SCROLL FOR NEXT