ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மீது புதிதாக 6 குற்றச்சாட்டுகளை எழுப்பி, அவரை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி எழுதிய 2-வது கடிதத்தில் ரகுராம் ராஜன் மீது எழுப்பிய குற்றச்சாட்டுகளாவன:
வட்டி விகிதத்தை அதிகரித்தால் ஏற்படும் தவிர்க்க முடியாத விளைவுகளை முன்னாள் ஐ.எம்.எஃப் தலைமைப் பொருளாதாரவாதியான ரகுராம் ராஜன் அறிந்திருக்க வெண்டும், அவரது இந்தக் கொள்கை வேண்டுமென்றே செய்யப்பட்டது, ஆகவே அதன் நோக்கத்தில் தேச விரோதமானது
உள்நாட்டு தொழிற்துறை பின்னடைவை ஏற்படுத்துவதற்காகவே அவர் வட்டி விகிதத்தை அதிகரித்தார். ஆர்பிஐ சட்டத்தை மீறி நடந்து கொண்டுள்ளார். தொடர்ந்து அமெரிக்க குடியுரிமையை வைத்துக் கொண்டு நிதி தொடர்பான ரகசிய தகவல்களை உலகம் முழுதும் அனுப்பி வருகிறார்.
மோடி அரசை பொதுவெளியில் இழிவு படுத்தி வருகிறார், ரகுராம் ராஜன் ‘அமெரிக்க ஆதிக்க குழு’வின் உறுப்பினராக செயல்படுகிறார், இந்தக் குழு உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் ஆதிக்க நிலையை காத்து நிற்பதாகும்.
மிகவும் பொறுப்பு மிக்க, அரசு உயர் பதவியிலிருக்கும் அவர் (ராஜன்) தன்னுடைய அமெரிக்க குடியுரிமையை புதித்துக் கொள்ள கட்டாய அமெரிக்கப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதாவது முன் உதாரணமாக திகழ்ந்து உறுதி அளிக்கும் உயர் பதவியிலிருப்பவர் தேசப்பற்று மிக்கவராகவும், நாட்டுக்காக நிபந்தனையற்ற அர்ப்பணிப்பு உடையவராகவும் இருப்பது அவசியம்.
அமெரிக்காவின் ஒரு 30 பேர் கொண்ட ஆதிக்கக் குழுவில் ரகுராம் ராஜனும் ஒருவர், அந்த குழு உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை மட்டும் உறுதி செய்து காப்பதாகும்.
ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசிய நெருக்கடி அப்பகுதிகளில் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது. ரகுராம் ராஜனும் அந்த நடைமுறையில் வட்டி விகிதத்தை அதிகரித்து சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் கழுத்தை நெரித்து விட்டார்.
பாதுகாப்பற்ற சிகாகோ பல்கலைக் கழகத்தின் தனது சொந்த மின்னஞ்சலிலிருந்து ரகசியமான, முக்கியமான நிதித் தகவல்களை உலகில் உள்ள பல்வேறு நபர்களுக்கும் அவர் அனுப்பி வருகிறார். இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்கள் குறித்த அலட்சியமான மனோபாவத்தை காட்டுகிறது.
நாட்டின் சகிப்பின்மை சூழலுக்கு நமது அரசே பொறுப்பு என்று அவர் (ராஜன்) மறைமுகமாக குத்தல் பேச்சு பேசி வருகிறார்.
இந்தியாவின் வளர்ச்சி நிலையை ‘பார்வையற்றோர் தேசத்தில் ஒற்றைக்கண் உடையவர் பாக்கியசாலி’ என்று இழிவு படுத்தியுள்ளார். இது போன்ற இழி நோக்கான கேலிப்பேச்சு நாட்டின் உயர் பதவி வகிப்பவர்களுக்கான நடத்தை அல்ல.
என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டு, தன்னுடைய குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும் எனவே தேச நலன் கருதி ரகுராம் ராஜன் பதவியை உடனடியாகப் பறிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.