16-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் புதன்கிழமை காலையில் கூடியது. கார் விபத்தில் இறந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் அவை ஒத்தி வைக்கப் பட்டது.
நாடாளுமன்றத்தின் புதிய மக்களவை கூட்டத்தொடரின் தொடக்கமாக, முதலில் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பி கமல்நாத் (67) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையின் ‘மஞ்சள் வரவேற்பறை’யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு மற்றும் இணை அமைச்சர் சந்தோஷ் கே.கங்வார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து அனைவரும் நாடாளுமன்றத்துக்கு புறப்பட்டனர். புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கமல்நாத் இந்தப் பதவியில் இருப்பார்.
மோடியின் நம்பிக்கை
முதல்முறையாக எம்பியாக தேர்ந் தெடுக்கப்பட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஜனநாயகக் கோயிலில், நாம் இந்திய மக்களின் நம்பிக்கை, விருப்பம் மற்றும் கனவுகளுக்காக பணியாற்றுவோம். பாஜக ஆட்சி அமைவதற்காக வாக்களித்து ஆசீர்வதித்த மக்களுக்கு நன்றி’’ என்றார்.
இரங்கல் தீர்மானம்
காலை 11.00 மணிக்கு நாடாளுமன்றம் கூடியவுடன் தற்காலிக சபாநாயகர் கமல்நாத் இருக்கையில் அமர்ந்தார். பிறகு அவர் செவ்வாய்கிழமை நடந்த கார் விபத்தில் மரணம் அடைந்த மத்திய கிராம வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டேவுக்கான இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். இதை மிகவும் நிசப்தத்துடன் அவை உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் அவையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
அவையில் நிலவிய சோகம்
புதிய மக்களவைக்கான முதலாவது கூட்டத்தொடரில் வழக்கமாக உறுப்பினர்கள் இடையே நிலவும் உற்சாகத்தை காணமுடியவில்லை. இதற்கு கோபிநாத் முண்டேவின் மரணம் ஒரு முக்கியக் காரணம். அதேபோல், பத்தாண்டுகளுக்கு பிறகு மக்களவையின் ஆளும்கட்சிப் பகுதியில் அமர்ந்திருந்த பாஜக உறுப்பினர்களுக்கு அது ஒரு சிறப்பான நாள். இருந்தும் அதை அவர்களால் வெளிக்காட்ட முடியவில்லை. அவையில் லேசான சோகம் படர்ந்திருந்தது.
எம்பிக்கள் பதவி ஏற்பு ஒத்திவைப்பு
முண்டே மரணத்தால், ஏற்கெனவே திட்டமிட்டபடி புதிய உறுப்பினர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை. அவை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று முதல் இரண்டு நாட்களில் மக்களவையின் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்வார்கள். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கமல்நாத் உறுதிமொழி கூறி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். 16-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் புதிய சபாநாயகர் 6-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.