நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறையில், கொலீஜியத்தின் பரிந்துரையை நிராகரிக்க அரசுக்கு உரிமை உள்ளது என்ற பிரிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ள கொலீஜியம், அரசின் நடைமுறைக் குறிப்பாணையைத் திருப்பி அனுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் 24 உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக, சில வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய நடைமுறைக் குறிப்பாணையை மத்திய அரசு தயார் செய்திருந்தது. இதில், சில திருத்தங்களை மேற்கொள்ளும்படி அதனை அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளது கொலீஜியம்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் தலைமையிலான கொலீஜியம், நடைமுறைக் குறிப்பாணையை முழுமையாக நிராகரிக்கவில்லை, சில குறிப்பிட்ட பிரிவுகளில் மாற்றம் செய்யும்படி ஆலோசனை வழங்கியுள்ளது என அரசின் உயர்நிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேச நலன் கருதி, கொலீஜியத்தின் பரிந்துரையை நிராகரிக்க மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. தற்போதைய விதிமுறையின்படி, கொலீஜியத்தின் பரிந்துரையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒரு முறை அரசு நிராக ரித்துவிட்டால், கொலீஜியம் வலி யுறுத்தினாலும் கூட மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை என குறிப் பாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த பிரிவுக்கும் கொலீஜியம் ஆட்சேபணை தெரிவித்துள்ளது.
அட்டர்னி ஜெனரல் மற்றும் மாநில அரசுகளுக்கான அட்வகேட் ஜெனரல் ஆகியோருக்கும் பரிந்துரைக்க உரிமை உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மறைமுகமாக தலையிட உதவும் இப்பிரிவுக்கும் கொலீஜியம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.