மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் பதுங்கியிருப்பது தனியார் டி.வி.யின் ரகசிய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கடந்த 1993-ம் ஆண்டில் மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் 257 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளியான மும்பை நிழல்உலக தாதா தாவூத் இப்ராஹிம் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார்.
அவர் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக மத்திய அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் அரசு இதனை மறுத்து வருகிறது.
இந்நிலையில் ‘சிஎன்என்-நியூஸ் 18’ தனியார் தொலைக்காட்சி நடத்திய ரகசிய விசாரணையில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் தாவூத் இப்ராஹிம் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டி13, பிளாக் 4, கராச்சி மேம்பாட்டு ஆணையம், கிளிப்டன், கராச்சி என்ற முகவரியில் குடும்பத்துடன் அவர் வாழ்ந்து வருகிறார். இதுதொடர்பான வீடியோ ஆதாரத்தையும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தாவூத் வசிக்கும் பங்களாவின் பாதுகாவலர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவர் அங்கு வசிப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அங்கு வசிக்கும் அனைவருக்கும் தாவூத் பற்றி தெரிந்திருக்கிறது.
தொலைக்காட்சி வீடியோவில் அங்குள்ள ஒரு பங்களாவின் பாதுகாவலர் பேசுகிறார். அவரிடம் தாவூத் பங்களா எங்கிருக்கிறது என்று நிருபர் கேட்கும்போது, மிகவும் அருகில் இருப்பதாக கூறுகிறார். மேலும் சிலரின் பேட்டிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
அல்-காய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் எவ்வாறு பதுங்கியிருந்தாரோ அதேபாணியில் தாவூத் இப்ராஹிம் கராச்சியில் பலத்த பாதுகாப்புடன் வாழ்ந்து வருகிறார்.
பாகிஸ்தானில் தாவூத் இல்லை என்று அந்த நாட்டு அரசு கூறி வரும் பொய்யை தனியார் தொலைக்காட்சியின் ரகசிய விசாரணை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.