இந்தியா

‘காளி’ போஸ்டர் சர்ச்சை | கொலை மிரட்டல் விடுத்த துறவி - லீனா மணிமேகலைக்கு வடமாநிலங்களில் வலுக்கும் எதிர்ப்பு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த லீனா மணிமேகலை, ‘காளி’ என்ற தலைப்பில் ஆவணப்படம் தயாரித்துள்ளார். இதன் சுவரொட்டி சமூக வலைதலங்களில் கடந்த 4-ம் தேதி வெளியானது. அதில், ஒரு பெண் காளி உருவத்தில் புகைப்பிடிப்பது போன்ற படம் இடம் பெற்றிருந்தது. அதற்கு பலதரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

இந்நிலையில், உ.பி. அயோத்தி துறவிகள், சுவரொட்டியைப் பார்த்து மிகவும் மனம் புண்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவர்களில் ஹனுமன்கடி மடத்தின் தலைவர் துறவி ராஜு தாஸ் கூறியதாவது:

லீனா மணிமேகலை தனது ஆவணப்படத்தில் இந்து கடவுள் மற்றும் சனாதன தர்மத்தின் கலாச்சாரங்களை கேலிக்குரியதாக சித்தரித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. கடவுள் உருவத்தை அவமதிக்கும் வகையில் சுவரொட்டி வெளியாக காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும். நுபுர் சர்மா கூறிய கருத்தால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்தது. இதுபோல், லீனாவின் இப்படத்தில் காளி மாதாவை செய்த விமர்சனம், உலகம் முழுவதிலும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தும்.

அதற்காக லீனா மணிமேகலை மன்னிப்பு கேட்டாலும், அதை ஏற்க முடியாத செயலை செய்துள்ளார். இதனால், காளி படத்தை திரையிட்டால் ஏற்படும் விளைவுகளை உங்களால் சந்திக்க முடியாது. தலையை தனியாக துண்டித்து கொள்ள விரும்புகிறாரா? அந்த தண்டனைக்கு உகந்ததுதான் லீனா செய்த குற்றம். இவ்வாறு துறவி ராஜு தாஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில், அயோத்தி காங்கிரஸ் இளைஞர் பிரிவின் முன்னாள் செயலாளர் சரத் சுக்லாவும், அயோத்தி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த ஆவணப்படத்தை தடை செய்வதுடன், அதை இயக்கிய லீனா மணிமேகலையை கைது செய்ய வலியுறுத்தி உள்ளார்.

காளி பட சுவரொட்டி வெளியான முதல் நாளிலேயே உ.பி.யின் லக்னோவில் ஹசரத் கன்ச் காவல் நிலையத்தில் வேத் பிரகாஷ் சுக்லா என்பவர் புகார் அளித்துள்ளார். லீனாவுடன் அப்படத்தின் எடிட்டர் ஸ்ரவன் ஒனேச்சன், தயாரிப்பாளர் ஆஷா ஆகியோர் மீதும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

பிஹாரின் பாட்னாவில் சிவசேனாவும், ம.பி.யில் ஆளும் பாஜக மூத்த அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவும் காளி சுவரொட்டி மூலம் இந்து கடவுள் தவறாக சித்தரிக்கப்பட்டதாக கண்டித்துள்ளனர். பிஹார் மாநில காங்கிரஸ் சார்பிலும் லீனாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT