இந்தியா

அரசியலில் இருந்து என்னை அழிக்க சதி: நீதிபதி முன் கண்ணீர் விட்ட எடியூரப்பா

இரா.வினோத்

அரசியலில் இருந்து என்னை அழிக்க சதி நடக்கிறது. எதிர்க் கட்சிகள் திட்டமிட்டு என் மீது பொய் வழக்குகளை போட்டுள்ளனர் என கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதியிடம் கண்ணீர்விட்டு அழுதார்.

கர்நாடக மாநில‌ பாஜக தலைவர் எடியூரப்பா கடந்த 2010-ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது தனியார் சுரங்க நிறுவனத்துக்கு குவாரி நடத்த அனுமதி அளித்தார். இதற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து தன‌து கல்வி அறக்கட்டளைக்கு ரூ.20 கோடி நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி சிபிஐ நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து எடியூரப்பா, அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா மற்றும் மருமகன் சோஹன் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது எடியூரப்பா ஆஜரானார். அப்போது நீதிபதி எஸ்.கே. நாயக் எடியூரப்பாவிடம் 473 கேள்விகளை கேட்டார். அக்கேள்விகளில் பெரும் பாலானவற்றுக்கு எடியூரப்பா, “ஆம், இல்லை, தெரியாது, பொய்” என பதிலளித்தார்.

இறுதியாக நீதிபதி, “இவ்வழக்கு தொடர்பாக ஏதாவது கூற விரும்புகிறீர்களா?'' என கேட்டார். அப்போது எடியூரப்பா தழுதழுத்த குரலில், ‘‘அரசியலில் இருந்து என்னை அழிக்க சதி நடக்கிறது. எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு என் மீது 20-க்கும் மேற்பட்ட‌ பொய் வழக்குகளை தொடுத்துள்ளன. இந்த வழக்கும் முழுக்கு முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்கு ஆகும். நான் முதல்வராக இருந்தபோது அரசுக்கு லாபம் கிடைக்கும் வகையிலேயே குவாரி நடத்த‌ அனுமதி வழங்கினேன்''என திடீரென கண்ணீர்விட்டு அழுதார். பிறகு தனது கைக்குட்டையில் கண்ணீரை துடைத்துக்கொண்டு தழுதழுத்தவாறு மீண்டும் பேச முயன்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ''இதுபற்றி வேறு எதுவும் கேட்க விரும்பவில்லை'' எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

அடிக்கடி அழும் எடியூரப்பா

கர்நாடக அரசியலில் பாஜகவை முன்னிலைக்கு கொண்டு வந்த எடியூரப்பா எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர். முதல்வராக இருந்த போது பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் நெருக்கடி, அதிருப்தி எம்எல்ஏ.க்களின் போர்க்கொடி, விவசாயிகள் தற்கொலை ஆகிய சந்தர்ப்பங்களில் மேடையிலேயே அழுதிருக்கிறார். ஊழல் புகாரில் சிக்கி முதல்வர் பதவியை இழந்த போதும், சிறைக்குச் சென்ற போதும் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். தற்போது மக்களிடமும், நீதிபதியிடமும் அனுதாபத்தை பெறுவதற்காகவே நீதிமன்றத்தில் எடியூரப்பா அழுதிருக்கிறார் என எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்

SCROLL FOR NEXT