ஆஜ்மீர்: முஸ்லிம்களின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தினை அவதூறாக விமர்சித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாள நுபுர் சர்மாவுக்கு ராஜஸ்தான் ஆஜ்மீர் தர்கா மதகுரு ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சல்மான் சிஸ்டி என்ற அந்த மதகுரு வெளியிட்ட வீடியோவில், நுபுர் சர்மாவின் தலையை வெட்டும் நபருக்கு எனது வீட்டைப் பரிசாக அளிப்பேன் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து போலீஸார் சல்மான் சிஸ்டியை கைது செய்துள்ளனர். அவர் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது: நபிகள் நாயகத்தை அவமதித்த காரணத்துக்காக நுபுர் சர்மாவை நானே சுட்டுக் கொலை செய்திருப்பேன். ஆனால், இப்போது கூறுகிறேன், அவருடைய தலையை யார் கொண்டு வருகிறார்கள் அவர்களுக்கு எனது வீட்டை பரிசாக அளிப்பேன். உலகின் முஸ்லிம் நாடுகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். நான் இதனை ராஜஸ்தானின் ஆஜ்மீர் தர்காவில் இருந்து கூறுகிறேன். இது ஹுஸூர் க்வாஜா பாபா கா தர்பாரின் வாக்கு என்று கூறியுள்ளார்.
ஆஜ்மீர் தர்கா கண்டனம்: இந்த வீடியோவை கண்டிப்பதாக ஆஜ்மீர் தர்காவின் தலைமை குரு தீவான் ஜைனுள் அப்தீன் அலி கான் கூறியுள்ளார். ஆஜ்மீர் தர்கா மத நல்லிணக்கத்தின் அடையாளம். அதை யாரும் சிதைக்கக் கூடாது என்று கூறியுள்ளார். ஏற்கெனவே அவர், இந்திய முஸ்லிம்கள் தலிபான் மனநிலையை அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறி உதய்பூர் சம்பவத்தை கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உதய்பூர் படுகொலை: நுபுர் சர்மாவின் பேச்சை ஆதரித்ததற்காகவே ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கன்னையா லால் என்ற தையல்காரர் கழுத்தறுத்து கொடூரமாக கொல்லப்பட்டார். இப்போது ராஜஸ்தானின் ஆஜ்மீரில் இருந்து நுபுர் சர்மாவுக்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.