டெல்லி விஞ்ஞான் பவனில் கடந்த வாரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், மாநில முதல்வர்கள் பங்கேற்ற மாநாடு நடந்தது. அப்போது பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் நீதித்துறையின் பளுவைக் குறைக்க மத்திய அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை என பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கண்ணீர் விட்டு அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் 30 ஆண்டுகளுக்கு முன் 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், ‘கடந்த ஆண்டு டிசம்பர் 31 வரையில் நாட்டில் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் 38.70 லட்சம் வழக்குகளும், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 2.70 கோடி வழக்குகளும் தேங்கி கிடக்கின்றன. அதே சமயம் கடந்த ஆண்டு உயர் நீதிமன்றங்கள் மூலம் 15 லட்சத்து 80,911 வழக்குகளும், கீழ் நீதிமன்றங்களில் ஒரு கோடியே, 78 லட்சத்து 97,488 வழக்குகளும் பைசல் செய்யப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.