பிரதமர் நரேந்திர மோடியின் கனவான காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகி வருவதாக கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வரான எடியூரப்பா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் மாபெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. காங்கிரஸின் கோட்டையாக இருந்த அசாமில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருக்கிறது. இதேபோல தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த மாநிலங்களில் பாஜக மிக வேகமாக வளர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் கனவான காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகி வருகிறது.
கர்நாடகாவில் நடைபெற உள்ள மேலவை தேர்தல், மாநிலங்களவை தேர்தல் ஆகியவற்றிலும் பாஜக வெற்றி பெறும். இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸை வீழ்த்தியே தீருவேன். காங்கிரஸ் இனி எந்தக் காலத்திலும் கர்நாடகாவில் வெற்றிபெற முடியாத சூழலை உருவாக்குவேன். காங்கிரஸின் அத்தியாயத்தை முடித்து, பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய திட்டத்தை நிறைவேற்றுவதே எனது குறிக்கோள் ஆகும். இதற்காக மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். உடல்நிலையைக்கூட பொருட்படுத்தாமல் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறேன்.
கர்நாடகாவில் 2018-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்க எல்லா வகையான வியூகங்களும் வகுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் திட்டமாக வரும் 29-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடகாவுக்கு அழைத்து வருகிறோம். மோடியின் வருகையால் கர்நாடகாவில் பாஜக புது எழுச்சி பெறும். இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு, அனந்தகுமார், சதானந்தகவுடா ஆகியோரையும் அடிக்கடி அழைத்து வந்து பேரணி, பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.