இந்தியா

குடியரசுத் தலைவர் பதவிக்கு சரத் பவார் முயற்சி: தனது கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதில் திணறல்

ஆர்.ஷபிமுன்னா

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோரின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ளது.

அப்பதவி களுக்கு அரசியல் தலைவர்கள் பலர் முயற்சித்து வருகின்றனர். இவர்களில் மகாராஷ்டிராவை சேர்ந்த சரத் பவாரும் ஒருவர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய சரத் பவார்(75), கடந்த 1999-ல் அக் கட்சியை விட்டு விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். என்றாலும் காங்கிரஸுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைத்த அவர், மத்தியில் காங்கிரஸ் அரசில் இடம்பெற்றார்.

இந்நிலையில் தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களு டனும் நல்ல நட்புடன் இருக்கும் சரத் பவார், இவ்விரு பதவிகளில் ஒன்றுக்கு முயற்சி செய்வதாக தெரியவந்துள்ளது.

இத்துடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் அவர் ராஜினாமா செய்து, அதன் செயல்பாடுகளிலும் விலகியிருக்க விரும்புகிறார். ஆனால் தலைவர் பதவிக்கு வேறு ஒருவரை ஒருமனதாக தேர்வு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் தேசியவாத காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் கூறும்போது, “சரத் பவார் தனது பதவியில் தனது மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலேவை நியமிக்க விரும்புகிறார். இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களிடம் பவார் கருத்து கேட்டபோது, அனைவருமே சுப்ரியாவை ஏற்கவில்லை. அடுத்து அஜீத் பவார் குறித்து பேச்சு எழுந்த போது, அவரது செயல்பாடுகள் அவசரகோலத்திலானது என்பதால் அவரையும் யாரும் விரும்ப வில்லை. தலைவர் பதவிக்கு சகன் புஜ்பால் தகுதியானவர் என்று கருதப்பட்டாலும் அவரோ ஊழல் புகாரில் சிக்கி சிறையில் இருக் கிறார். இதனால் பிற்படுத்தப்பட்ட அல்லது தலித் சமூகத்தவரை தலைவராக தேர்வுசெய்ய பவார் விரும்புகிறார். ஆனால் மராட்டிய மண்ணின் மைந்தர் அரசியலுக்கு பெயர் போன எங்கள் கட்சிக்கு இதுவும் சிக்கலாக இருக்கும்” என்றனர்.

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கும் சரத் பவாருக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோருடன் அதிக நெருக்கம் உள்ளது. இதனால் சரத் பவாருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதற்கு காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புகள் குறைவு எனக் கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT