இந்தியா

டெல்லியை மாநிலமாக மாற்ற மசோதா: பாஜக மீது குற்றம் சுமத்த கேஜ்ரிவாலின் தேர்தல் தந்திரமா?

செய்திப்பிரிவு

சுதந்திரத்துக்குப் பிறகு மற்ற மாநிலங்களை போல் இருந்த டெல்லி, கடந்த 1956-ல் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு, குடி யரசுத் தலைவரின் நேரடி கண் காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இதன்படி டெல்லியின் காவல் துறை, மாநகராட்சிகள் உட்பட பலவும் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் வருகின்றன. இந்த கண்காணிப்பு பணியை மத்திய அரசு சார்பில் துணை நிலை ஆளுநர் மேற்கொண்டு வருகிறார். அவர் அவ்வப்போது மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து வருகிறார்.

இதனால் டெல்லியில் ஆளும் கட்சியின் சார்பிலான முதல்வர் மற்றும் மத்திய அரசு என இரு அதிகார மையங்கள் உள்ளன. இவர்கள் இருவேறு கட்சிகளாக அமையும்போது, இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு தலைநகரின் முன்னேற்றம் தடைபடுவதாக புகார் நிலவுகிறது.

தற்போது இந்த வகை மோதல் ஆம் ஆத்மி கட்சி பாஜக இடையே தொடர்கிறது. டெல்லியை தனி மாநிலமாக மாற்றுவோம் என்று இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தன. ஆனால் கடந்த ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பின் பாஜக ஏனோ அமைதி காத்து வருகிறது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி தனது முயற்சியை தொடர்கிறது. இந்த வகையில் டெல்லியை தனி மாநில மாக மாற்றுவதற்கான மசோதாவை அடுத்த வாரம் தயாரிக்க இருப்ப தாக முதல்வர் கேஜ்ரிவால் அறிவித் துள்ளார்.

இது குறித்து டெல்லி அரசின் உயரதிகாரிகள் வட்டாரம் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “டெல்லியை தனி மாநிலமாக மாற்றுவது மிக, மிக கடினம். இதன் சிக்கல்களை நன்கு அறிந்து கேஜ்ரிவால் அதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். இது துணைநிலை ஆளுநர் மூலமாக மத்திய அரசுக்கு செல்லும்போது, அங்கு கிடப்பில் போடப்படும். வரும் பஞ்சாப் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் மீது இதை குற்றச்சாட்டாக சுமத்த ஆம் ஆத்மி கட்சியினர் முயற்சிக்கின்றனர். பஞ்சாப் தேர்தலில் இவ்விரு கட்சி களுக்கு இணையாக மோதி, ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்க விரும்புவதே இதற்கு காரணம்” என்று தெரிவித்தனர்.

கேஜ்ரிவால் தனது திட்டப்படி மசோதா தயார் செய்து பொது மக்களின் கருத்துகளை அறிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உள்ளார். பிறகு தனது அமைச்சரவையால் மசோதா ஏற்கப்பட்ட பின் அதை சட்டப் பேரவையில் தாக்கல் செய்கிறார்.

இங்கு நிறைவேற்றப்படும் மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். பிறகு இதை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விவா தித்து நிறைவேற்ற வேண்டி இருக் கும். இதற்கு ஏதுவாக, குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் மாளிகைகள், பிரதமர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள், வெளிநாடுகளின் தூதரகங்கள் என டெல்லியை மாநில அரசாக மாற்ற தடையாக உள்ள பகுதிகளை மத்திய அரசின் அதிகாரத்திலேயே விட்டு விட கேஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT