இந்தியா

மணிப்பூர் நிலச்சரிவு:15 ராணுவ வீரர்கள் உள்பட 20 பேர் பலி; 44 பேர் மாயம்

செய்திப்பிரிவு

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. 44 பேரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மணிப்பூரில் கடந்த புதன்கிழமை இரவு ராணுவ முகாமில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலரும் சிக்கிக் கொண்டனர். இதுவரை 13 வீரர்களும் பொதுமக்களில் 5 பேரும் மீட்கப்பட்டுள்ளன. 20 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 15 பேர் ராணுவ வீரர்கள்.
விபத்து பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் சற்று சுணக்கம் நிலவுகிறது. மண்ணில் புதையுண்ட வீரர்களைத் தேட வால் ரேடார் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மணிப்பூர் முதல்வர் பைரன் சிங், ராணுவ உயர் அதிகாரிகளுடன் நேற்றிரவு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று மாலை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் மணிப்பூர் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்திருந்தார். உயிரிழந்த 15 வீரர்களில் 9 பேர் மேற்குவங்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார். அவர் அந்தப் பதிவில், டார்ஜிலிங் மலைப்பகுதியைச் சேர்ந்த 9 பேர் மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

SCROLL FOR NEXT