விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை அகஸ்டாவெஸ்ட்லேண்டிற்குப் பெற்றுத்தர முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனைத்து உதவிகளையும் செய்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் நாடாளுமன்றத்தில் இன்று குற்றம்சாட்டினார்.
மேலும் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்தில் ஒற்றைச் சாளர சூழ்நிலையை காங்கிரஸ் உருவாக்கியதாக மனோகர் பாரிக்கர் குற்றம்சாட்டினார்.
மக்களவையில் ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது மனோகர் பாரிக்கர் பேசும் போது, “எஸ்.பி.தியாகி, கவுதம் கைத்தான் ஆகியோர் சிறிய அளவிலேயே இதில் பங்கு செலுத்தியுள்ளனர், ஊழல் எனும் கங்கை நதியில் இவர்கள் கைகளைக் கழுவியுள்ளனர் அவ்வளவே, ஆனால் நதி எங்கே செல்கிறது என்பதை அரசு கண்டுபிடிக்கத்தான் போகிறது.
இந்த காப்டர் ஒப்பந்தத்தை அகஸ்டாவெஸ்ட்லேண்ட் பெற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அனைத்து உதவிகளையும் செய்துள்ளது. 12 விவிஐபி ஹெலிகாப்டர்களுக்கான ரூ.3,600 கோடி ஒப்பந்தத்தில் பயனடைந்தோர் யார் யார் என்று அரசு நிச்சயம் கண்டுபிடிக்கும்.
விசாரணை குறித்து காங்கிரஸ் ஏன் கவலைப்பட வேண்டும்? நான் எந்தப் பெயரையும் குறிப்பிடவில்லை. கங்கை எங்கே போகிறாள் என்பது உங்களுக்குத் தெரிந்துள்ளதாகவே படுகிறது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக லஞ்சம் வழங்கப்பட்டதாக இத்தாலியில் நவம்பர் 2011-ல் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி ஹெலிகாப்டர்களை வாங்கும் முயற்சியையும் தொடர்ந்தது, 3 காப்டர்கள் டெலிவரியும் செய்யப்பட்டது.
அகஸ்டாவெஸ்ட்லேண்டின் மூல நிறுவனமான ஃபின்மெக்கானியாவின் அதிகாரிகள் 2013-ல் கைது செய்யப்பட்ட பிறகுதான் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கோரினார்.
இதற்கு முன்னர் அரசு நிறுவனத்திடம் எழுதி கேட்கவில்லை, மாறாக தூதரகத்திடம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றது. அதாவது இது எப்படி இருக்கிறது என்றால், நடவடிக்கை எடுக்க விரும்பமில்லாத போது கமிட்டி அமைப்பது போல் உள்ளது.
ஃபின்மெக்கானியா அதிகாரி கைதுக்குப் பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்துக்குள்ளானது. அது தானாகவே விசாரணை மேற்கொள்ள விரும்பவில்லை.
மார்ச் 2013-ல் சிபிஐ இது தொடர்பாக முதல் தகவலறிக்கை பதிவு செய்தது. ஆனால் எஃப்.ஐ.ஆர். நகல் அமலாக்கப் பிரிவிடம் டிசம்பர் வரை அளிக்கப்படவில்லை. 2012-லேயே ஊழல் தடுக்கப்பட்டிருக்க முடியும்.
காப்டர் ஒப்பந்தத்திற்கான டெண்டரை சமர்பித்தது இத்தாலி அகஸ்டாவெஸ்ட்லேண்ட். ஆனால் ஒப்பந்தம் அளிக்கப்பட்டதோ பிரிட்டனில் உள்ள அகஸ்டாவெஸ்ட்லேண்ட் பன்னாட்டு நிறுவனத்துக்கு. அது மூல உற்பத்தி நிறுவனமல்ல.
டெண்டர் சமர்பித்தது ஒரு நிறுவனம், ஒப்பந்தம் அளிக்கப்பட்டது மற்றொரு நிறுவனத்திற்கு, இப்படி நான் எங்கும் பார்த்ததில்லை. இதில் ஏகப்பட்ட சட்ட உள்ளீடுகள் உள்ளன.
முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விவிஐபி ஹெலிகாப்டர் வாங்கும் நடைமுறையை தொடங்கிய போது டெண்டர் நடைமுறைகளில் அதிக நிறுவனங்களை உள்ளடக்கியது, ஆனால் பின்னால் வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இதனை அகஸ்டாவெஸ்ட்லேண்டிற்கு மட்டும் பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொண்டது.
மேலும் அகஸ்டா நிறுவனத்துக்குச் சாதகமாக விலைகளும் அதிகப்படுத்தப்பட்டன. ஒரே நிறுவனம்தான் ஒப்பந்தத்தைப் பெறும் எனும்போது விலைகளை ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை” என்றார் மனோகர் பாரிக்கர்.