காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் புல்வாமா மாவட்ட கமாண்டராக செயல்பட்ட தாரிக் பண்டிட் நேற்று கைது செய்யப்பட்டார்.
புல்வாமா நகரில் ராணுவத்திடம் அவர் சரண் அடைந்ததாகவும் பிறகு அவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் தாரிக் சரண் அடையவில்லை எனவும் அவர் சுற்றி வளைக்கப்பட்டதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
தாரிக், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் பிராந்திய கமாண்டராக செயல்பட்டு வரும் பர்ஹன் வானிக்கு மிகவும் நெருக்கமானவர். தாரிக் கைது செய்யப்பட்டிருப்பது பர்ஹன் வானி தலைமையிலான குழுவுக்கு விழுந்த பலத்த அடியாக கருதப்படுகிறது.
புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த பர்ஹன் வானி (22), படித்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து தங்கள் அமைப்பில் சேர்த்து வருகிறார். இவரைப் பிடிப்பதற்கு பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை பலன் அளிக்கவில்லை. இவரைப் பற்றிய தகவலுக்கு பாதுகாப்பு படையினர் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஹிஸ்புல் அமைப்பு சமூக வலைதளங்களில் வெளியிட்ட பல்வேறு படங்கள் மற்றும் வீடியோக்களில் பர்ஹன் வானியுடன் தாரிக் பண்டிட் இணைந்து காணப்படுகிறார்.
தாரிக் பண்டிட் குறித்த தகவலுக்கு பாதுகாப்பு படையினர் ரூ.3 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தனர்.