கொலை வழக்கில் சிக்கியுள்ள இத்தாலிய கடற்படை வீரர் சல்வடோர் கிரோனி தாய்நாடு திரும்ப புதிய நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இத்தாலிய கடற்படை வீரர்கள் லட்டோரி, சல்வடோர் கிரோனி ஆகிய இருவரும் இந்திய கடற்பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு, பிப்ரவரி 15-ம் தேதி, கடல் கொள்ளையர்கள் என்று கருதி கேரள மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்றனர்.
இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரகத்தில் தங்கினர். அதன்பின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மசிமிலியானோ லட்டோரி ஏற்கெனவே இத்தாலி சென்றார். அவர் இத்தாலியில் தங்கி யிருக்கும் காலக்கெடுவை செப்டம்பர் 30 வரை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் நீட்டித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், கிரோனியின் ஜாமீன் நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தளர்த்தி, அவர் இத்தாலி செல்ல அனுமதி அளித்தது. ஆனால், இத்தாலி - இந்தியா இடையே உள்ள நீதித்துறை தொடர்பான பிரச்சினைகளுக்கு சர்வதேச நீதிமன்றம் முடிவு காணும் வரை அவர் இத்தாலியில் தங்கியிருக்க உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
கிரோனியின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி.பந்த் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர், ‘‘இந்தியாவுக்கு சாதகமாக சர்வதேச நீதிமன்றம் முடிவெடுத்தால், கிரோனியை ஒரு மாதத்துக்குள் இந்தியாவுக்கு அழைத்து வரவேண்டியது டெல்லியில் உள்ள இத்தாலி தூதரின் பொறுப்பு’’ என்று உத்தரவிட்டனர்.
மேலும், மாதத்தின் முதல் புதன்கிழமை இத்தாலியில் உள்ள காவல் நிலையத்தில் கிரோனி ஆஜராகி தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல் ரோமில் உள்ள இந்திய தூதரகத்தில் இத்தாலி தூதரகம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்த வழக்கில் சாட்சிகளை கலைக்கவோ அல்லது சாட்சிகளை மிரட்டவோ கூடாது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருப்பதாக கிரோனி உறுதி அளிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறியதாக தெரிய வந்தால், ஜாமீன் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு 4 நிபந்தனைகளுடன் கிரோனி இத்தாலி செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக கொலை குற்ற வழக்கில் இத்தாலி கடற்படை வீரர்கள் மீது வழக்கு நடத்துவது யார் என்பதில் இத்தாலிக்கும் இந்தியாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு மீது பினராயி விஜயன் புகார்
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான பதில்வாதம் செய்ததால்தான், இத்தாலி கடற்படை வீரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இவ்வழக்கில் ஆரம்பம் முதலே தவறாகவே வாதங்களை முன்வைத்தது வந்தது மத்திய அரசு. வழக்கு இங்குதான் நடந்திருக்க வேண்டும். ஏற்கெனவே மத்திய அரசின் அணுகு முறையை நாங்கள் எதிர்த்தோம். கடுமையாக விமர்சித்தோம். மத்திய அரசின் தவறான வாதத்தால்தான் இத்தாலி வீரருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது” என்றார்.