ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி, மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
பிஹார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றபோது தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார். கடந்த நவம்பர் மாதம் பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அப்போது ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான மெகா கூட்டணியில் லாலு சேர்ந்து கொண்டார்.
தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி சார்பில் தனது மகன்கள் தேஜஸ்வி, தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோரை களம் இறக்கினார் லாலு. இருவரும் தேர்தலில் வெற்றி பெற்றனர். அதன்பிறகு தேஜஸ்விக்கு துணை முதல்வர் பதவியும் (26 வயதில் துணை முதல்வரானவர்), தேஜ் பிரதாப்புக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பதவியும் வாங்கி கொடுத்தார் லாலு.
அந்தத் தேர்தலில் லாலுவின் ஆர்ஜேடி கட்சி மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 80 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதனால் லாலு கேட்ட முக்கியமான இலகாக்களை முதல்வர் நிதிஷ்குமாரும் மறுப்பேதும் பேசாமல் வழங்கி விட்டார். இந்த வளர்ச்சிக்கு லாலுவின் மகள் மிசா பாரதியும் (40) ஒரு முக்கிய காரணம். தனது சகோதர்களுக்காக தீவிர பிரச்சாரம் செய்தவர் மிசா பாரதி.
இந்நிலையில், பிஹார் மாநிலத்தில் 5 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலியாகிறது. அந்த இடங்களுக்கு எம்எல்ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் ஆர்ஜேடி 2 இடங்களையும், ஆளும் ஐஜத 2 இடங்களையும் பாஜக ஒரு இடத்தையும் பகிர்ந்து கொள்ள உள்ளன.
அரசியலில் மகன்கள் இருவரையும் இறக்கிவிட்ட பின்னர், இப்போது மாநிலங்களவைக்கு மனைவி ராப்ரி அல்லது மகள் மிசா பாரதி ஆகிய இருவரில் ஒருவரை அனுப்ப லாலு திட்டமிட்டுள்ளார். மனைவி ராப்ரி ஏற்கெனவே முதல்வர் பதவி வகித்தவர். எனவே, மிசா பாரதியை மாநிலங்களவை எம்.பி.யாக்க லாலு முடிவெடுத்துவிட்டதாக ஆர்ஜேடி வட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாடலிபுத்ரா தொகுதியில் மகள் மிசாவை களம் இறக்கினார் லாலு. அதனால் லாலுவின் நெருங்கிய உதவியாளர் ராம் கிர்பால் யாதவ் கடும் அதிருப்தி அடைந்து பாஜக.வில் சேர்ந்து அதே தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ராம் கிர்பாலிடம் மிசா பாரதி தோற்றுப் போனார். தற்போது மத்திய அமைச்சராக இருக்கிறார் ராம் கிர்பால்.
அந்தத் தேர்தலில் மகளை தேசிய அரசியலுக்கு கொண்டு வரும் லாலுவின் முயற்சி தடைபட்டது. இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக்குவதன் மூலம் ஆர்ஜேடி.யின் முகமாக டெல்லியில் மிசா பாரதி இனி வலம் வருவார் என்று கட்சியினர் கூறுகின்றனர்.
தவிர மாநிலங்களவைக்கு ஆர்ஜேடி சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை லாலு தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளார். லாலு மீதான வழக்குகளை ஜெத்மலானிதான் கவனித்து வருகிறார். அதனால் அவர் எம்.பி.யானால் டெல்லியில் தனக்காக அவர் பணிபுரிய எளிதாக இருக்கும் என்று லாலு கணக்கு போட்டுள்ளார்.
லாலு மனைவி ராப்ரியும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தம்பதிக்கு மொத்தம் 9 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.