புதுடெல்லி: ராஜஸ்தானின் உதய்பூரில், நுபுர் சர்மாவிற்கு ஆதரித்து செயல்பட்டதாக தையல் தொழிலாளி பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் பதற்றச் சூழல் உருவாகியுள்ளது. கொலைக்குப் பின் மிரட்டல் வீடியோ வெளியிட்ட கொலையாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த மே 27-ல் தொலைகாட்சி விவாதம் ஒன்றில் பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான நுபுர் சர்மா இஸ்லாமியர்களின் இறைத் தூதர் முகம்மது நபி குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால், இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் முஸ்லிம் நாடுகளிடம் இருந்தும் கண்டனம் எழுந்தது. இதனால் சர்வதேச நாடுகளிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில் பாஜகவிலிருந்து நுபுர் சர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மீது டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. நுபுரின் சர்ச்சைக் கருத்தால் ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல இடங்களில் கலவரம் நிகழ்ந்தது.
இந்தநிலையில், இதன் உச்சமாக இன்று (செவ்வாய்க்கிழமை) ராஜஸ்தானில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட கன்னையாலால் டெலி (40), சுற்றுலா நகரமான உதய்பூரின் மால்டாஸ் சாலையிலுள்ள பூத் மஹாலில் "சுப்ரீம் டெய்லர்" எனும் பெயரில் தையலகம் நடத்தி வந்தார். இன்று மாலை இவரது கடைக்கு துணி தைப்பதற்காக இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்களின் துணியை தைப்பதற்காக அளவெடுத்த கன்னைய்யா லாலில் கழுத்தை திடீர் என அவர்கள் அறுத்தனர். பிறகு அங்கிருந்து இருவரும் தப்பிவிட, ரத்த வெள்ளத்தில் கன்னையா லால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, தகவலறிந்து அப்பகுதியில் கூடியக் கூட்டம் கோபத்தின் உச்சத்திற்கு சென்றது. இதனால் உதய்பூரின் பல பகுதிகளில் கடையடுப்பு நடத்தப்பட்டு கலவரச் சூழல் உருவானது. இதனால், மால்டாஸ் உள்ளிட்ட சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை அமைதி காக்கும்படி ஆளும் ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெல்லோட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து முதல்வர் கெல்லோட் தனது ட்விட்டரில் பதிவில், ’இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் ஆழம் வரை சென்று விசாரித்த்து அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யப்படுவர். அனைத்து கட்சியினரும் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். சம்பவம் மீதான வீடியோ பதிவுகளை பரப்பி அமைதிச்சூழலை கெடுக்க வேண்டாம். இதன் மூலம், குற்றவாளிகளின் நோக்கம் நிறைவேறிவிடும்’என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொலையின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. கன்னைய்யா லால், பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட நுபுர் சர்மாவிற்குஆதரவளிப்பதாக வாட்ஸ் அப்பில் பதிவிட்டிருந்தார். இதற்காக, கன்னைய்யா லாலுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் மீது காவல் துறையிடம் அளித்த புகாரின் பேரில் கன்னைய்யாவிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
சில தினங்களுக்கு முன் நிலைமை சரியாகி விட்டதாகக் கருதி கன்னைய்யா லால், தன் பாதுக்காப்பை நிறுத்தி விட்டதாகக் கருதப்பட்ட நிலையில் இன்று அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, எதிர்கட்சி தலைவரான பாஜகவின் குலாப்சத் கட்டாரியா, ‘உடனடியாகக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, கன்னைய்யா லாலின் குடும்பத்திற்கு உதவி தொகை வழங்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தின் பின்னால் பெரிய அமைப்புகள் இருக்கும் என எண்ணுகிறேன். இது, ராஜஸ்தான் அரசின் தோல்வியைக் காட்டுகிறது‘என கூறியுள்ளார்.
கலவரச்சூழல் காரணமாக உதய்பூரின் பல பகுதிகளில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தை கண்டித்து நகரில் ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
வைரலாகும் வீடியோ:
இந்தச் சூழல்நிலையில், கன்னைய்யாவை நாங்கள் தான் வெட்டிக் கொன்றதாகப் பெருமைபட்டு இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் வீடியோ பதிவை பகிர்ந்துள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதில் இரண்டு வீடியோக்கள் உள்ளன. ஒன்றில், கன்னையாவின் படுகொலை சம்பவமும், மற்றொன்றில் அதற்கானக் காரணத்தையும் விளக்கி உள்ளனர்.
தலைகளில் தொப்பியும், முகத்தில் தாடியுடனும் பேசும் ஒருவர் தனது பெயர் முகம்மது ரியாஸ் அஸ்தாரி என்றும் தன்னுடன் இருப்பவர் முகம்மது கவுஸ் என்றும் அறிமுகப்படுத்துகிறார். இருவரது கைகளிலும் இறைச்சிக் கடையில் பயன்படுத்தும் கத்திகள் உள்ளன.
சம்பவம் குறித்து வீடியோவில் முகம்மது ரியாஸ் அஸ்தாரி உருது மொழியில் பேசும்போது, "உதய்பூர் மக்களே! இறைத்தூதரை விமர்சிப்பவர்களுக்கு ஒரே ஒரு தண்டனை தான். அவர்கள் உடலிலிருந்து தலையை தனியாக்கி விடுவோம்’ என்று எச்சரித்துள்ளார். தொடர்ந்து கொலைக்கு காரணம் நுபுர் சர்மாவிற்கு கன்னைய்யா ஆதரவு அளித்து தான் எனக் கூறும் இருவரும், பிரதமர் நரேந்திர மோடியையும் எச்சரிக்கும் வகையில் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பிரதமருக்கு மிரட்டல்:
அந்த வீடியோ பதிவில், ‘இந்த கத்தி ஒருநாள் உங்கள் கழுத்திற்கு வந்து சேரப் பிரார்த்திக்கிறோம். இதை கேளுங்கள் நரேந்தர மோடி, நீங்கள் பற்ற வைத்த நெருப்பை நாம் அணைத்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.
இதுவரை எங்குமே நடைபெறாத வகையிலான இந்தச் சம்பவம் பெரும் உதய்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அருகிலுள்ள உத்தரப் பிரதேசத்திலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இருவரும் கைது:
கடைசியாக கிடைத்த தகவலின்படி, உதய்பூர் சம்பவத்தின் இரண்டு கொலையாளிகளும் கைது செய்யப்பட்டனர். உதய்பூருக்கு அருகிலுள்ள ராஜ்சமந்த் மாவட்டத்தின் பீமாவில் இருவரும் சிக்கினர். அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.