இந்தியா

உ.பி.யின் லக்னோ உட்பட 13 ’ஸ்மார்ட் நகரங்கள்’ அறிவிப்பு

ஆர்.ஷபிமுன்னா

’ஸ்மார்ட் நகரங்கள்’ பட்டியலில் மேலும் 13 நகரங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ள உத்தர பிரதேசத்தின் தலைநகரான லக்னோ முக்கிய இடம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு மாநிலம் சார்பில் பரிந்துரைக்கப்படும் ஸ்மார்ட் நகரங்களை தீர்மானிக்க மத்திய நகர்ப்புற அமைச்சகம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது அம் மாநிலத்தின் நகரங்களின் எண்ணிக்கை, அதன் மக்கள் தொகை, வளர்ச்சி மற்றும் புவிஇயல் சமத்துவம் ஆகியவற்றை பொறுத்து இறுதி முடிவு எடுத்து தேர்ந்தெடுத்து வருகிறது. இதற்கான போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்ட 23-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 நகரங்களின் பெயர் இன்று காலை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.

இதில், முதல் பெயராக உபியின் தலைநகரான லக்னோ இடம் பெற்றுள்ளது. இம் மாநிலத்தில் அடுத்த வருடம் துவக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளது. இதை அடுத்து வாரங்கல்(தெலுங்கானா), தரம்சாலா (இமாச்சாலப் பிரதேசம்), சண்டிகர், ராய்பூர் (சத்தீஸ்கர்), நியூ டவுன் கொல்கத்தா, பாகல்பூர் (பிஹார்), பண்ணாஜி (கோவா), போர்ட் பிளேயர் (அந்தமான் நிகோபாத்), இம்பால் (இம்பால்), ராஞ்சி (ஜார்கண்ட்), அகர்தாலா (திரிபுரா) மற்றும் பரீதாபாத் (ஹரியானா) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இது குறித்து மத்திய அமைச்சரான வெங்கய்ய நாயுடு கூறுகையில், ‘அதி விரைவு போட்டியில் 13 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய அரசு 30.229 கோடி ரூபாய் முதலீடு செய்யும். இத்துடன் இதுவரை அறிவிக்கப்பட்ட

33 ஸ்மார்ட் நகரங்களுக்கான முதலீடு ரூபாய் 80.789 கோடி ஆகும்.’ எனத் தெரிவித்தார்.

ஸ்மார்ட் நகரங்களுக்கான மூன்றாவது போட்டியில் பிஹாரின் பாட்னா, இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா, சத்தீஸ்கரின் புதிய ராய்பூர், அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகர், ஆந்திர பிரதேசத்தின அமராவதி, கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் ஆகிய தலைநகரங்கள் மற்ற நகரங்களுடன் இடம் பெற உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக முன்னணியின் ஆட்சி மத்தியில் அமைந்தது முதல் அதற்கு முன் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அறிமுகப்படுத்திய திட்டங்களையே அமுல்படுத்துவதாக ஒரு புகார் நிலவி வருகிறது. இந்த எண்ணத்தை மாற்றும் வகையில் கடந்த வருடம் பிரதமர் மோடி துவக்கி வைத்த பாஜகவின் கனவு திட்டமான ஸ்மார்ட் நகரங்கள் அமையும் எனக் கருதப்படுகிறது.

இதற்குமுன், ஜனவரியில் 20 ஸ்மார்ட் நகரங்களை மத்திய நகர்ப்புறவளர்ச்சித்துறை அறிவித்திருந்தது. மொத்தம் பத்து வருடங்களுக்கான இந்த ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்திற்கு மத்திய அரசு வரும் பத்தாண்டுகளுக்கு சுமார் 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ஸ்மார்ட் நகர திட்டத்துக்கு தனி நிறுவனம் தொடங்க மாநகராட்சி தீவிரம்

ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்துக்காக முதல்கட்டமாக 20 நகரங்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு கடந்த ஜனவரி 28-ம் தேதி வெளியிட்டது. இதில் சென்னை, கோவை ஆகிய 2 நகரங்கள் இடம்பெற்றிருந்தன.

சென்னை மாநகரை ஸ்மார்ட் நகரமாக மாற்றுவதற்கான கருத்துருவை ரூ.1,366 கோடியில் தயாரித்து மாநகராட்சி நிர்வாகம் அனுப்பியிருந்தது. இந்த திட்டத்துக்கான நிதியில் ரூ.1,000 கோடியை மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் தலா ரூ.100 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு வழங்கும். மீதம் உள்ள ரூ.366 கோடியை, மாநகராட்சி நிர்வாகம் தனது சொந்த நிதியிலிருந்து செலவிடும்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியை பெற, மெட்ரோ ரயில் நிறுவனம் போல, சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தை தொடங்க வேண்டும். தேர்தல் பணிகள் காரணமாக, கடந்த 3 மாதங்களாக தனி நிறுவனத்தை தொடங்க முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன” என்றார்.

SCROLL FOR NEXT