இந்தியா

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்: முரட்டுப்பெண் சாத்வி ஆனது எப்படி?

செய்திப்பிரிவு

மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் நகரைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரின் மகள் பிரக்யா சிங் தாக்கூர். இளம் வயதில் முரட்டுப்பெண்ணாக வலம் வந்தவர். ஆண்மகனைப் போல முடிவெட்டிக்கொண்டு, டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றியவர்.

அதேநேரம், இவருக்கு கண்காணிப்பாளர் என்ற மறுபக்கமும் உண்டு. குறிப்பாக, பெண்களை கிண்டல் செய்ப வர்களை அடித்து உதைப்பதை வழக்கமாகக் கொண்டவர். ஒருமுறை தனது தங்கையுடன் சேர்ந்து குண்டர்களை கடுமையாக தாக்கியதுடன் அவர்களை மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்.

முதுநிலை பட்டதாரியான (வரலாறு) பிரக்யா (45) எப்போதும் வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தார். குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் இளைஞர் பிரிவான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினராக இருந்த இவர், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மகளிர் பிரிவான துர்கா வாஹினியிலும் உறுப்பினராக இருந்தார்.

கடந்த 2002-ம் ஆண்டு ‘ஜெய் வந்தே மாதரம் ஜன் கல்யாண் சமிதி’ என்ற அமைப்பை நிறுவினார்.

முன்பு ஒரு முறை பிரக்யாவின் தந்தை ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் “பிற இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஓடிய இளம்பெண்களை மீட்கும் பணியில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது” என கூறியிருந்தார்.

பின்னர் ஆன்மிக குரு சுவாமி அவதேஷானந்த் கிரியின் சீடரானார் பிரக்யா. அப்போது தனது பெயரை சாத்வி புர்னா சேதானந்த் கிரி சர்மா என மாற்றிக் கொண்டார். அதன் பிறகு இந்தூரில் ராஷ்ட்ரிய ஜக்ரன் மஞ்ச் என்ற ஆசிரமத்தைத் தொடங்கினார். அந்த காலகட்டத்தில் ஜபல்பூர், இந்தூர், சூரத் உள்ளிட்ட நகரங்களுக்கு அடிக்கடி சென்று வந்தார்.

இந்நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் குண்டு வெடித்ததில் 7 பேர் பலியாயினர். இது தொடர்பாக மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பிரக்யா பெயரில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரக்யாவை போலீஸார் கைது செய்தனர்.

அவரை விடுவிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன. இன்றைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். கடந்த 2007-ல் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் சுனில் ஜோஷி கொலை வழக்கிலும் இவருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

பின்னர் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக விசாரணை நடந்த போதிலும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ சார்பில் சிறப்பு நீதிபதி எஸ்.டி.டேக்காலே முன்னிலையில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “இவ்வழக்கில் பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் 5 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை. எனவே அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தொடர்வதில் அர்த்தம் இல்லை” என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பிரக்யா விடுதலை செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT