இந்தியா

'அசாம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது; பிரதமர் ஆட்சிக் கவிழ்ப்பில் பிஸியாக இருக்கிறார்' - காங்கிரஸ் எம்.பி.

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அசாம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது; பிரதமர் ஆட்சிக் கவிழ்ப்பில் பிஸியாக இருக்கிறார் என்று அம்மாநில காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் சாடியுள்ளார்.

அசாமில் தொடர் மழை காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அசாம் வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகளில் பிரதமர் மோடியோ எந்த அக்கறையும் காட்டவில்லை என்று எதிர்க்கட்சிகள் பரவலாக குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. கோகோய் அளித்தப் பேட்டியில் அரசை வெகுவாக சாடியுள்ளார்.

89 பேர் உயிரிழப்பு: அசாம் வெள்ளத்தால், பிரம்மபுத்ரா மற்றும் பராக் நதியில் நீர்வரத்து மேலும் உயர்ந்ததால் புதிய இடங்களையும் மூழ்கடித்துள்ளது. இதனால் 32 மாவட்டங்களை சேர்ந்த 55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 89 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அசாமின் நாகோன் மாவட்டம் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு 4.57 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணை மறைக்கும் அதிகாரம்: இந்நிலையில், பிரதமர் மோடியோ எந்த அக்கறையும் காட்டவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் சாடியுள்ளார். அசாம் வெள்ள பாதிப்பை பிரதமர் மோடி நேரில் பார்வையிடவும் இல்லை, வெள்ள நிவாரணத்துக்காக நிதியுதவியும் அறிவிக்கவில்லை. நாட்டில் இப்போது பெரிய பிரச்சினை அசாம் வெள்ளம். ஆனால் பாஜகவினர் கண்களுக்கு அது தெரியவில்லை. அவர்கள் கண்களை அதிகாரம் மறைத்துள்ளது.

பிரதமர் மோடி மகாராஷ்டிரா அரசியல் குழப்பம், குஜராத் தேர்தலை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு அசாம் வெள்ளத்தையும் கவனிக்கலாம். ஆனால் பாஜகவுக்கு அதிகாரம் மட்டும்தானே எல்லாம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT