இந்தியா

மும்பை அருகே ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 5 தொழிலாளர்கள் பலி: 125 பேர் மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

மும்பை அருகே தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து, தொழிலாளர்கள் 5 பேர் பலியாகினர்.

மும்பை அருகே தானே மாவட்டத் தில் டோம்பிவளி புறநகர் பகுதியில், மஹாராஷ்டிரா தொழில் மேம் பாட்டுக் கழக தொழிற்பேட்டையில், தனியார் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது.

நேற்று பகல் 11 மணியளவில் தொழிற்சாலையில் திடீரென பயங்கர வெடிச் சத்தத்துடன் புகை மூட்டமும் ஏற்பட்டு, கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. தொழிலாளர்கள் நாலா புறமும் சிதறி ஓடினர்.

உடனடியாக தீயணைப்புப் படை யினர் விரைந்து வந்து, கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்டனர். எனினும், விபத்தில் சிக்கி, 5 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும், காயங்களுடன் உயிர் தப்பிய 125க்கும் அதிக மானோர் அருகில் உள்ள மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலையில் இருந்த பாய்லர் வெடித்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது. பூகம்பம் ஏற்பட்டது போன்ற தாக்கத்தை இந்த விபத்து ஏற்படுத்தியதாக அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர். மேலும், இதன் தாக்கம், 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உணரப்பட்டுள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

இதற்கிடையே, டோம்பிவளி பகுதியில் உள்ள 900-க்கும் அதிகமான மற்ற தொழிற்சாலைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT