மேகாலாயாவில் நாட்டு மது வகை உற்பத்திக்கும் குடிபோதை சண்டைக்கும் பேர்போன ஒரு கிராமம் இப்போது தேயிலை சாகுபடிசெய்யும் மாதிரி கிராமமாக மாறி உள்ளது.
ஷில்லாங்கிலிருந்து சுமார் 45 கி.மீ. தூரத்தில் உள்ள மாவ்லிங்கோட் கிராமம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டு மது உற்பத்திக்கும், குடி போதைக்கும் பெயர் பெற்று விளங்கியது. இந்த கிராம மக்கள் அரிசி மற்றும் தினையைக் கொண்டு மது வகைகளை தயாரித்தனர்.
ஆனால் அந்த கிராமம் இப்போது முற்றிலும் வேறு பாதைக்கு மாறிவிட்டது. ஆம் அனைவரும் மது உற்பத்தியை கைவிட்டுவிட்டு, டீ உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். பச்சை, வெள்ளை மற்றும் பழமையான கருப்பு என பல்வேறு சுவைகளில் இவர்கள் உற்பத்தி செய்யும் டீ ‘உர்லாங்’ என்ற பெயரில் விற்பனையாகிறது. உர்லாங் என்றால் அவர்கள் மொழியில் ‘கனவு நனவானது’ என்று பொருள்.
இந்த கிராம மக்கள் டீ உற்பத்திக்கு மாறியதற்கு, முன்னாள் பள்ளி ஆசிரியரும் கிராம தலைவருமான டி.எல்.நொங்ஸ்பங்தான் முக்கிய காரணம். இவர் தொடங்கிய டீ உற்பத்தியாளர் சங்கத்தில் இப்போது 20 விவசாயிகள் இணைந்துள்ளனர். இதில் 11 பேர் பெண்கள். இந்த கிராமத்தில் 50 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஆண்டுதோறும் சுமார் 3,000 கிலோ பச்சை தேயிலைகள் உற்பத்தியாகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக ஏற்றுமதியும் செய்து வருகின்றனர்.